யாழ் மாவட்டத்தில் கோவிட் பரவலால் இறந்தால், உடலை எரிப்பதற்கு கிட்டத்தட்ட 5-6 நாட்கள் எடுக்கின்றன. யாழ்ப்பாணம் வண்பண்ணை கோம்பயன்மணல் சைவ மயானத்தில் மட்டும் தான் எரியூட்டும் இயந்திரம் இருக்கிறது. அதிலும் தினம் 5 உடல்கள் மட்டும் தான் எரியூட்டமுடியும். இதனால் கோவிட்டால் இறந்தாலும் எரிக்கமுடியாத நிலைமையில் அல்லலுறுகின்றனர் மக்கள்.

சாதாரண சிற்றறிவுக்கு எட்டிய சில சந்தேகங்களை கேள்வியாய் வைக்கிறேன். இது குற்றப்பத்திரிகை அல்ல மாறாக எவ்வாறு நாங்கள் எமது சமூகத்தின் ஒத்துழைப்புடன் இந்த செயற்பாடுகளை (Process Enhancement) மெருகூட்டலாம் என்ற சிறிய சிந்தனை. நிலைமை மோசமான நிலையில் கருத்துக்கூறுவது சுலபம், களத்தில் நிற்பது கடினம் என்று ஒதுக்காமல், கடினத்திலும் சுலபமாக்கும் (Make complex simple) என்ற அடிப்படையில் இதனை பார்க்கவேண்டும்.

(1) முதலாவதாக வேறுநாடுகளில் எரிப்பது போல், தோற்றாளர்களின் தனிமைப்படுத்தல் முகாம் போல், தனிமையான வட்டாரத்தில் ஆட்கள் இல்லாத ஒரு இடத்தல் தகுந்த முறையில் சாதாரணமாக எரிக்கமுடியாதா ?

(2) எவ்வளவு சனத்தொகை , எவ்வளவு இறப்பு என்றும், எதிர்பார்ப்பு இறப்புகளினைக்  கருத்தில் கொண்டும், இரண்டாவது ஏன் மூன்றாவது இயந்திர எரியூட்டிகளை யாழ்ப்பாணத்தில் பொருத்துவது ஏன் கடினமான விடயம் ? அவற்றினை நிரந்தரமாகவே அந்த மயானத்தில் தொடர்ந்து இருக்கவிடலாம்.

(3) இந்த இயந்திர எரியூட்டிகளை எங்கிருந்து எடுக்கிறோம், அதன் விலை என்ன ? அதற்கு மாநகரசபை அல்லது அரசு பங்களிப்பு செய்யாதா ? பணம் இல்லையெனில் யாழ்ப்பாணத்திலோ அல்லது புலம்பெயர் சமூக அமைப்புகளிடமோ உதவிகேட்கலாமா ?

(4) யாழ்ப்பாணத்தில் உள்ள இயந்திரவியல் மற்றும் உற்பத்திவியல் (Mechanical and Production Engineers ) எந்திரவியலாளர்களின் உதவியுடன், ஏற்கனவே இருக்கும் எரியூட்டியின் பிராமண, இயக்கு மற்றும் செயற்பாட்டு இலக்கணங்களை (Technical Specification) எடுத்து இதே போல் இன்னொரு எரியூட்டி செய்ய இயலாதா ? 

(5) முழுமையாக எரித்த சாம்பலில் அல்லது எரியும் புகையில் கோவிட் பரவ வாய்ப்புகள் இருக்கிறதா ? ( அறிவுக்கான கேள்வி) 

(6) எரியூட்டுவதை காணொளியொ அல்லது நிலற்படமோ எடுத்து, எடுக்கும் வசதிகளை ஏற்படுத்தி வரமுடியாத உறவினர்களுக்கு கொடுக்கும் வசதி இருந்தால் சிறப்பு.  ஆனால் எவ்வளவு சாத்தியமோ தெரியாது ஒரு சிந்தனை மட்டுமே. (மக்களின் மனதில் வரக்கூடிய ஆசையின் வெளிப்பாடு)

இப்படியொரு காலம் மனித சமுதாயத்திற்கு சவாலாக, இறுதிக்கிரிகைகள் செய்யமுடியாத, பார்க்கமுடியாத காலம். இதனை கருத்தில் கொண்டு நாங்கள் கவனமா வீட்டில் இருப்போம். எங்களை மட்டுமல்ல மற்றவர்களையும் காப்பாற்றும். இறப்பின் பின் வரும் வருத்தங்கள், இடையூறுகளையும் வெல்லும். இறந்தவர்கள் குடும்பத்தினர் வீட்டிலே அவர்களின் படத்தினை வைத்து , விளக்கேற்றி , திருமுறைகள் ஓதி அவர்களை வழியனுப்பி வைப்போம்.

இந்த இக்கட்டான காலத்தில் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் வேலைசெய்யும் வைத்தியர்கள், மாநகரசபையினர், அரச அதிகாரிகள், காவல்துறையினர், வாகன ஓட்டுனர்கள், தாதிமார், சமூக உதவியாளர்கள் அனைவரும் அல்லும் பகலும் அர்ப்பணிப்புடன் வழங்கும் சேவைகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.

இறந்தபின்னாவது குடும்பத்தாருக்கு ஒரு மனஆறுதலை வழங்கும் செயலாகவே இந்த பதிவை பதிவிடுகிறேன்.

நன்றி 

பார்த்தீபன்