மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் தான் இவ்வாறு பதவி விலகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்கவுள்ளதாக அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் விசேட அமைச்சரவைப் பத்திரமொன்று அஜித் நிவாட் கப்ராலுக்காகத் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்பதாயின் கப்ரால் சில நிபந்தனைகளை விதித்திருந்தார்.

அதன்படி மத்திய வங்கியின் ஆளுநராக தாம் பொறுப்பேற்றால், அமைச்சருக்கு இருக்கின்ற அதிகாரங்கள், சிறப்புரிமைகளையும் அவர் கேட்டிருந்தார்.

இவற்றை வழங்குவதற்காகவே தற்போது விசேட வர்த்தமானி அறிவிப்பு தயாரிக்கப்படுவதாக அறியமுடிகிறது.