ஜனாதிபதியின் ஆலோசனையில், அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் பொறுப்புக்கு பெருந்தொகையான அரிசி…பொலன்னறுவை பிரதேசத்தில் பாரியளவில் நடத்தப்படும் அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் வசம் காணப்பட்ட பெருந்தொகையான அரிசியை அரசுடமையாக்கும் நடவடிக்கை, இன்று (08) இடம்பெற்றது. 

இதன்படி, நிபுண, லத்பந்துர, அரலிய, ஹிரு, நிவ் ரத்ன மற்றும் சூரிய போன்ற அரிசி ஆலைகளில் காணப்பட்ட தொகைகளைக் கையகப்படுத்தும் நடவடிக்கை, அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் செனரத் நிவுன்ஹெல்ல மற்றும் நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ஆகியோரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. 

பொலன்னறுவை பிரதேசத்தில் பாரியளவில் நடத்தப்படும் அரிசி ஆலைகளிலிருந்து சந்தைக்கு விநியோகிக்கப்படாத அரிசித் தொகை, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் கையகப்படுத்தப்பட்டதை அடுத்து, அவற்றை சதொச கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு விநியோகிப்பதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த அரிசித் தொகை, நுகர்வோரான பொதுமக்களை உடனடியாகப் போய்ச் சேரவேண்டும் என்பதே, அரசாங்கத்தின் நோக்கமாகும். 

நிவ் ரத்ன அரிசி ஆலையிலிருந்த அரிசித் தொகையைக் கையகப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது, அதன் உரிமையாளரால், திட்டமிடப்பட்ட வகையில் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதோடு, அதிகாரிகளின் பணிகளுக்கும் தடைகள் ஏற்படுத்தப்பட்டன. 

அரசாங்கத்தால் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலைகள் நியமிக்கப்பட்டதை அடுத்து, போதுமானளவு உற்பத்தித் தொகையைப் பேணவும் எவ்விதப் பற்றாக்குறையுமின்றி சந்தைக்கான அரிசியை விநியோகிப்பது தொடர்பிலும், அரிசி ஆலை உரிமையாளர்களுடன், அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தது. 

இருப்பினும், அவர்கள் இணங்கிய விதத்தில் நடந்துகொள்ளாமையால், அவ்வரிசி ஆலைகளில் காணப்பட்ட அரிசித் தொகையைக் கையகப்படுத்தி விநியோகிக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால், வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ஆகியோருக்கு, ஆலோசனை வழங்கப்பட்டது. 

பொலன்னறுவை மாவட்டச் செயலாளர் டபிள்யூ.ஏ.தர்மசிறி, பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒஷான் ஹேவாவிதாரன உள்ளிட்ட பலரும், இந்தக் கையகப்படுத்தும் நடவடிக்கையில் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.