தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை கூறியுள்ள பொய்யான அறிவிப்புகள் தொடர்பாக திரும்பிப் பார்த்து விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு நாடு உள்ளாகலாம் என நான் கடந்த வருடம் ஜனவரி 24 ஆம் திகதி அரசாங்கத்துக்கு வலியுறுத்திய போதிலும் அத்தகையதொரு அபாய நிலைமை இல்லை என அரசாங்கம் கூறியது.

அதே வருடம் பெப்ரவரி 5 ஆம் திகதி மக்களுக்கு முகக்கவசம் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என நான் தெரிவித்த போது விடயத்துக்கு பொறுப்பான அப்போதைய அமைச்சர் முகக்கவசம் தேவைப்படாது என கூறியிருந்தார்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முழு உலகுமே தடுப்பூசி ஏற்றிக்கொண்டிருக்கும் போது பொறுப்பு வாய்ந்த அமைச்சர்களோ கங்கைகளில் குடங்களைப் போட்டு சான்று வழங்கப்படாத பாணியை பாராளுமன்றத்துக்கே கொண்டுவந்து ஜனரஞ்சகப்படுத்தியிருந்தனர்.

தடுப்பூசியை கொண்டுவர வேண்டியதன் முக்கியத்தும் மற்றும் தேவைப்பாட்டை தொடர்ச்சியாக கூறும் போது வேறு வழிமுறைகளை பரிசீலிப்பதாகவும் தேவையான தருணத்தில் தடுப்பூசி கொண்டுவரப்படும் என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சரொருவர் கூறியிருந்தார்.

இத்தகைய செயற்பாடுகளால் தடுப்பூசி ஏற்றும் பணியை தாமதப்படுத்தி இத்தனை ஆயிரம் உயிர்களை அரசாங்கமே பலி கொடுத்துள்ளது.

கடந்த ஜனவரி 11, மே 23 ஆகிய திகதிகளில் இரண்டு அமைச்சர்கள் அரசாங்கத்திடம் நிதி இருப்பதாகக் கூறிய போதிலும் மே 17 ஆம் திகதி அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, அரசாங்கத்திடம் நிதி இல்லை என கூறி மக்களிடம் நிதி சேகரிக்கும்படி கோரிக்கை விடுத்திருந்தார்.

அவ்வாறான பரஸ்பர அறிவிப்புகளை விடுத்த அமைச்சர்கள் தொடர்பாக அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்ன?

இதேவேளை, 2021 மே 4 ஆம் திகதியும் கடந்த செவ்வாய்க்கிழமையும் வுழஉடைணைரஅயடி மருந்தின்மை தொடர்பாக அரசாங்கத்துக்கு நினைவுகூரிய போது அந்த மருந்துக்கு எந்தப் பற்றாக்குறையும் இல்லை என உண்மையற்ற விதத்தில் கருத்து தெரிவித்த அமைச்சருக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை என்னவெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.