இலங்கையின் தேசிய கபடி அணியில் முதற்கட்ட தெரிவில் கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகத்தின் மூன்று வீராங்கனைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முந்தினம் (14) கொழும்பு இடம்பெற்ற தேசிய கபடி அணிக்கான முதற்கட்ட தெரிவில் நாடாளவிய ரீதியில் 25 பேர் கலந்துகொண்டனர். இதில் 18 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த 18 பேரில் கிளிநொச்சி வீராங்கனைகள் மூவரும் அடங்குகின்றனர்.

கிளிநொச்சி சிவநகர் பாடசாலையின் பழைய மாணவிகளான இவர்கள் உருத்திரபுரம் உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்தவர்கள். 

ஆரம்ப கட்ட பயிற்சியை ஆசிரியர் இராமநாதன் பரஞ்சோதி அவர்களிடம் பெற்ற இவர்கள் கடந்த காலங்களில் தேசிய மட்ட போட்டிகளிலும் பங்குப்பற்றியிருந்தார்கள்.

எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் இடம்பெறவுள்ள ஆசிய மட்ட கபடி போட்டிக்கான இலங்கை அணியின் முதற்கட்டத்தில் தெரிவில் இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

எங்கள் மண்ணை பெருமைப்படுத்தும் மூன்று வீராங்கனைகளுக்கும் எமது இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.