யார் ஆப்கானிஸ்தானுக்குள் வரக் கூடாது என அமெரிக்கா நினைத்ததோ அந்த அதிபயங்கர தீவிரவாதி காபூலுக்குள் காலடி எடுத்து வைத்துள்ள நிகழ்வு உலக நாடுகளைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றிய சில நாட்களிலே அவர்களின் ஆட்டம் ஆரம்பித்து விட்டது. 20 ஆண்டுகள் பதவியில் இல்லாத கோபத்தை தங்கள் செயல்கள் மூலம் தாலிபான்கள் காட்டி வருகிறார்கள். முதலில் அமெரிக்கப் படைகள் அங்கு இருந்த போது யாரெல்லாம் தங்களுக்கு எதிராகச் செயல்பட்டார்களோ அவர்களின் மொத்த பட்டியலையும் தாலிபான்கள் எடுக்க ஆரம்பித்துள்ளார்கள்.

இதன் காரணமாக  முந்தைய ஆட்சியிலிருந்த அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கதிகலங்கிப் போயுள்ளார்கள். பலரும் உயிர் பிழைத்தால் போதும் என்ற ரீதியில் மற்ற நாடுகளுக்குத் தப்பிச் செல்லும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள். இதற்கு எல்லாம் சேர்த்து வைத்தது போல தற்போது வெளியாகியுள்ள வீடியோ ஒன்று உலக நாடுகளைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதில், அமெரிக்காவால் மிகவும் தேடப்பட்டு வரும் பயங்கரவாதி Khalil Haqqani ஆப்கானின் முக்கிய நகரான காபூலில் தனது காலடியைப் பதித்துள்ளார். இவர் அல்கொய்தாவுடன் தொடர்புடையவர் என்பதால், இவருடைய தலைக்கு 5 மில்லியன் டாலர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் Khalil இப்போது காபூலில் இருப்பது அமெரிக்கா போன்ற மற்ற நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியாகியுள்ள வீடியோவில் Khalil Haqqani, காபூலில் தாலிபான் போராளிகளுக்காக அங்குப் பிரார்த்தனை நடத்தியது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவால் தேடப்பட்டு வந்த நபர் எந்த வித பதற்றமும் இல்லாமல் காபூல் நகரில் இருக்கும் மிகப் பெரிய மசூதியில் பிரார்த்தனை செய்வதற்கு வந்துள்ளது அமெரிக்காவிற்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Haqqani நெட்வொர்க் பாகிஸ்தானின் பழங்குடிப் பகுதிகளில் வடக்கு மாவட்டத்திலிருந்து செயல்படுகிறது. முன்னதாக வளைகுடா நாடுகள் மற்றும் தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் காணப்பட்ட தாலிபான்களின் நிதி ஆதரவாளர்களைச் சந்திக்க Khalil Haqqani உலகம் முழுவதும் பயணம் செய்தார். இவர் அல்கொய்தாவின் தீவிர ஆதரவாளர் என்பதுடன் அதன் இராணுவ நடவடிக்கைகளுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

தற்போது Haqqaniயின் குழு ஆப்கானிஸ்தானுக்குள் வந்துள்ளதால், மீண்டும் அல்கொய்தா ஆப்கானிஸ்தானுக்குள் வந்துவிடுமோ என்ற அச்சம் உலக நாடுகளைப் பாடாய்ப் படுத்திவருகிறது. கடந்த ஆண்டு அமெரிக்காவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, தாலிபான்கள், அல்கொய்தா போன்ற தீவிரவாதிகளுக்கு நாங்கள் புகலிடம் கொடுக்கமாட்டோம் என்று உறுதியளித்தனர்.

ஆனால் Haqqaniயை அனுமதித்ததன் மூலம் தனது உண்மையான முகத்தைத் தாலிபான்கள் காட்ட ஆரம்பித்துள்ளார்கள் எனச் சர்வதேச விவகாரங்களைக் கவனிக்கும் பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.