இலங்கையின் தற்போது டெல்ட்டா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருவதன் காரணமாகவும், மருத்துவமனைகளில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், நாளை நள்ளிரவு முதல் இரண்டு வாரங்களுக்கு பொது முடக்கத்தை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.

சுகாதார பிரிவினரின் ஆலோசனைகளுக்கு அமைவாக நாளை நள்ளிரவு முதல் நாட்டை முடக்குவதற்கு ஜனாதிபதியால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் நிலைமை தொடர்பில் எடுக்கப்படவேண்டிய முக்கிய தீர்மானங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் சுகாதார அமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் அவசர சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய கொரோனா நிலைமைக்கு மத்தியில் நாட்டை மூன்று வாரங்களுக்காவது முடக்க வேண்டுமென ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஏனைய 10 பங்காளிக்கட்சிகள் ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த பிண்ணனியில் நாளை நள்ளிரவு முதல் நாட்டை இரு வாரங்களுக்கு முழுமையாக முடக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த காலப்பகுதியில் சுகாதார பிரிவினர் உள்ளிட்ட அத்தியாவசிய சேவையாளர்களுக்கு மாத்திரம் பயணிப்பதற்கு அனுமதி வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.