சீனாவிடமிருந்து இலங்கை கடந்த 17ஆம் தேதியன்று 61.5 பில்லியன் இலங்கை ரூபாய் (6150 கோடி இலங்கை ரூபாய்) மதிப்பிலான கடனுதவியை உடன்படிக்கையொன்றின் ஊடாக பெற்றுக்கொண்டுள்ளது.

இலங்கைக்கான சீன தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில், பதிவொன்றின் ஊடாக இந்த தகவலை வெளியிட்டிருந்தது. இலங்கையின் கோரிக்கைக்கு அமையவே இந்த கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடனால் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்ற விமர்சனம் எழுந்துள்ள அதே வேளையில், வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தவே கடன் வாங்கப்பட்டுள்ளது என்று இலங்கை அரசு தெரிவிக்கிறது.

கோவிட் ஒழிப்பு நடவடிக்கைகள், பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துதல் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்காக இந்த கடன் வழங்கப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

இலங்கையில் கோவிட் தொற்று பரவ ஆரம்பித்த காலம் முதல், நாடு பாரிய பொருளாதார சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக ஆளும் தரப்பு அனைத்து சந்தர்ப்பங்களிலும் தெரிவித்து வருகின்றது.

இலங்கையின் பிரதான வருமான வழியான சுற்றுலாத்துறை, 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் முழுமையாகவே பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனைய வருமான வழிகளும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அந்நிய செலாவணி வருமானங்களும் குறைவடைந்துள்ளன.

இதனால், இலங்கை அரசாங்கம் பாரிய பொருளாதார வீழ்ச்சிகளை சந்தித்து வருவதாக அரசாங்கம் தெரிவித்து வருகின்ற நிலையிலேயே, இந்த கடன் தொகை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.