பிரபல நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய ’காஞ்சனா 3’ என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய ’காஞ்சனா 3’ திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் ஓவியா, வேதிகா, நிக்கி டம்போலி மற்றும் அலெக்ஸாண்ட்ரா ஜாவி என நான்கு நாயகிகள் நடித்து இருந்தனர். இதில் அலெக்சாண்டிரியா ஜாவி என்பவர் ரோஸி எனும் கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் இந்த கேரக்டரில் நடித்த அவருக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர் ஜாவி தனது காதலருடன் கோவாவில் தங்கியிருந்த நிலையில் திடீரென காதலர் இவரை விட்டு பிரிந்து விட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும் திடீரென நேற்று இரவு அவர் தான் தங்கியிருந்த விடுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதனையடுத்து காவல்துறையினர் அவருடைய பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ’காஞ்சனா 3’ திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.