இலங்கையில் கடந்த ஓரிரு தினங்களில் மாத்திரம் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைத்திருந்த சுமார் 10,255 மெற்றிக்தொன்னுக்கும் அதிக சீனியை கண்டுபிடித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி வத்தளை – ஹுனுபிட்டி – புதிய வீதியில் பதுக்கி வைத்திருந்த சுமார் 800 மெற்றிக் தொன் வெள்ளை சீனியை, கிரிபத்கொடை பொலிஸார் நேற்று (30) கைப்பற்றியுள்ளனர்.

அந்த சீனித் தொகை கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர், இந்த களஞ்சியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், வத்தளை பகுதியிலிருந்து சுமார் 5,455 மெற்றிக் தொன் சீனி கைப்பற்றப்பட்டிருந்தது.

அவ்வாறு பல்வேறு பகுதிகளில் கடந்த ஓரிரு தினங்களில் மாத்திரம், சுமார் 10,255 மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான சீனி கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ,நாட்டில் திடீரென ஏற்பட்ட சீனி தட்டுப்பாடு காரணமாக, ஒரு கிலோகிராம் சீனியின் விலை 210 ரூபா முதல் 220 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது