கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு, துபையில் இருந்து 191 பேருடன் வந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம், ஓடுபாதையில் தரையிறங்கும்போது தடுமாறி விபத்துக்குள்ளாகியுள்ளது.


விபத்துக்குள்ளான விமானத்தில் 174 பயணிகள் இருந்தனர் என்றும், 10 கைக்குழந்தைகள், 2 விமானிகள் மற்றும் 5 விமானப் பணியாளர்கள் இருந்தனர் என்றும் இந்திய விமான போக்குவரத்துத்துறை ஊடகப்பிரிவு கூடுதல் தலைமை இயக்குநர் ராஜீவ் ஜெயின் தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில் கோழிக்கோடு விமான நிலையம் எந்த அளவிற்கு பாதுகாப்பானது குறித்து என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.


கோழிக்கோடு விமான நிலையம் அகலமான விமானங்களை இயக்குவதற்கு ஏதுவான விமான நிலையம் இல்லை என விமான போக்குவரத்து பாதுகாப்பு குறித்து பணியாற்றிவரும் ஷெனாய் தெரிவிக்கிறார்.


கோழிக்கோடு விமான நிலையம் மலையின் மீது அமைந்துள்ள விமான நிலையமாகும். கடந்த காலங்களில் இந்த விமான நிலையம் குறித்து வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அகலமான அமைப்பு கொண்ட விமானங்களை இயக்குவது அதிக ஆபத்து என்று தெரிவித்துள்ளனர்.


சில வருடங்களுக்கு முன் இந்திய விமான நிலையங்கள் கட்டுப்பாடு ஆணையம், கோழிக்கோடு விமானநிலையத்தின் ஓடுபாதையைச் சுற்றி பாதுகாப்பு பகுதியை அமைத்தது. ஆனால் அது போதுமானதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.


விமானப் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து போராடிவரும் வழக்கறிஞரும், ஆர்வலருமான யெஷ்வந்த் ஷெனாய், "இம்மாதிரியான பேரழிவு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்கனவே இருந்தது" என்கிறார். எனவே இந்த விபத்து எந்த ஆச்சரியத்தை தரவில்லை என்றும் அவர் கூறுகிறார்.


"எந்த ஒரு விமான நிலையத்திற்கும் ஓடுபாதையின் இரு முனையிலும் 150மீட்டர் இடம் இருக்க வேண்டும். ஆனால் கோழிக்கோடில் அது கிடையாது. மேலும் அகலமான விமானங்களுக்கு ஏற்ற விமான நிலையமாக கோழிக்கோடு விமான நிலையம் இல்லை. இம்மாதிரியான விமான நிலையத்தில் விமானங்கள் செல்வது மிக ஆபத்தானது. ஹஜ் பயணத்திற்கான விமான்ங்கள் இங்கிருந்து செல்லும். நான் இதுகுறித்து இந்திய விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகத்திற்கு பலமுறை மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த விபத்து எனக்கு ஆச்சரியமாக இல்லை. இந்த விபத்தால் இந்திய போக்குவரத்துத் துறையில் இருக்கும் பிரச்சனை குறித்து உலகிற்கு தெரியவந்துள்ளது," என்று யெஷ்வந்த் தெரிவித்தார்.


"சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பின்படி விமான நிலையங்களுக்கு சில விதிகள் இருக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டிற்கும் இம்மாதிரியான தரக்கட்டுப்பாட்டாளர் ஒருவர் இருப்பார். அதன்பிறகுதான் அனுமதி வழங்கப்படும். இந்தியாவை பொறுத்தவரை இந்திய விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம்தான் அதற்கு பொறுப்பு. விமான நிலையங்களில் அந்த தரம் இல்லை என்றால் அதுகுறித்து அனைவருக்கும் தகவல் அளிக்க வேண்டும். எனவேதான் அனுபவம் வாய்ந்த விமானிகள் மட்டுமே அம்மாதிரியான விமான நிலையத்திலிருந்து விமானத்தை இயக்க அனுமதிக்கப்படுகின்றனர்" என்று யெஷ்வந்த் சுட்டிக்காட்டுகிறார்.


"தற்போது இந்த விபத்துக்குள்ளான காரணத்தை சொல்ல இயலாது. இருப்பினும் மழையும் இதற்கான ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் மோசமான வானிலையிலும், இடங்களிலும்கூட விமானிகள் விமானத்தை இயக்கியுள்ளனர்" என்று யெஷ்வந்த் தெரிவித்தார்.


கடந்த 2010ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி மங்களூரில் ஏர் இந்தியா விமான ஒன்று விபத்துக்குள்ளானதை தொடர்ந்து விமானப் போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளுக்காக யெஷ்வந்த் ஷெனாய் குரல் கொடுத்து வருகிறார்.