சாம்சங் நிறுவனத்திடம் 50 லட்சம் டாலர் (ரூ.37 கோடியே 50 லட்சம்) லஞ்சமாக பெற்ற வழக்கில் ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
குஜராத் மாநிலம் டாகேஜ் பெட்ரோகெமிக்கல் மண்டலத்தில் ஒரு தொழிற்சாலை அமைக்க ஓ.என்.ஜி.சி.யின் துணை நிறுவனமான 'ஓபால்' ஒப்பந்தம் கோரியது. இந்த ஒப்பந்தத்தை கொரியாவை சேர்ந்த சாம்சங் என்ஜினீயரிங் கம்பெனிக்கு பெற்றுத் தருவதற்காக, பிரபல ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி தலையிட்டார்.
இதற்காக சாம்சங் நிறுவனத்திடம் அவர் 50 லட்சம் டாலர் (ரூ.37 கோடியே 50 லட்சம்) லஞ்சமாக பெற்றதாக தெரிகிறது. சஞ்சய் பண்டாரிக்கு சொந்தமான சன்டெக் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் வெளிநாட்டு வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டதை சி.பி.ஐ. கண்டுபிடித்தது.


இந்நிலையில், இதுதொடர்பாக சஞ்சய் பண்டாரி மீதும், அவரது நிறுவனம், ஓ.என்.ஜி.சி., சாம்சங் ஆகியவற்றின் நிர்வாகிகள் மீதும் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. ஏற்கனவே ராணுவ தளவாட ஊழல்களை சந்தித்து வரும் பண்டாரி, லண்டனில் இருப்பதாக கூறப்படுகிறது.