சுவிட்சர்லாந்தில் உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் தமது பிள்ளைகளின் கண் முன்னே சுத்தியலால் மனைவியை கொடூரமாக கொலை செய்த சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது.


சுவிட்சர்லாந்தின் வலாய்ஸ் மண்டலத்தில் உள்ளூர் அரசியல்வாதியான 55 வயது இகோர் தமது மனைவியை சுத்தியலால் அடித்து கொலை செய்த வழக்கில் வியாழனன்று நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.
2018 ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தில் கொலைக்கு பின்னணியாக அமைந்த சூழல் தொடர்பில் இகோர் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
39 வயதான குறித்த பெண்மணி சுத்தியலால் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தார்.
தனது இரு பிள்ளைகளின் தாயாரான அந்த பெண்மணியை இகோர் 15 முறை சுத்தியலால் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளது விசாரணையில் அம்பலமானது.
வியாழனன்று நடந்த நீதிமன்ற விசாரணையில் சுமார் 3.5 மணி நேரம் நீதிபதி இகோரிடம் கொலைக்கு பின்னால் இருந்த சூழல் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
கடனாளியான இகோர் தாமும் குடும்பமும் வசித்துவந்த இல்லத்தில் இருந்து அதிகாரிகளால் வெளியேற்றப்படும் சூழலில், மனைவியை கொலை செய்துள்ளார்.
தமக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை மனைவியிடம் இருந்து இகோர் மறைத்து வந்துள்ளார்.
தமது மனைவி மீது அளவு கடந்த பாசம் இருந்ததாக கூறும் இகோர் அதனாலையே அவரிடம் தமது பொருளாதார சிக்கலை தெரியப்படுத்த இகோர் மறுத்துள்ளார்.
அனைத்திற்கும் ஒரு தீர்வு உண்டு எனவும், மிக விரைவில் ஒரு வேலையை கண்டுபிடிப்பேன் என நம்பியதாகவும் இகோர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கடன் சுமையால் தங்களை குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்படும் நாளை பலமுறை அவர் ஒத்திவைக்க முயற்சி செய்துள்ளார்.
ஆனால் 2018 மார்ச் மாதம் தமது மனைவிக்கு நிலைமை தெரியவர இருவருக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மனைவி பிள்ளைகளுடன் தம்மை விட்டு பிரிந்து சென்றுவிடுவார் என்ற அச்சத்தில், தாம் என்ன செய்கிறோம் என தெரியாமலே அந்த கொலையை செய்ததாக இகோர் தெரிவித்துள்ளார்.
ஆனால் குழந்தைகளில் ஒருவர். இளைய மகள் தன் தாய் கொல்லப்பட்டதைக் கண்டாள். அந்த நேரத்தில் மூன்றரை வயதில் இருந்த குழந்தை, தாயார் இறப்பதற்கு முன்பு தந்தை தலையில் சுத்தியலால் தாக்கியதைக் கண்டதாக சாட்சியம் அளித்தார்.
2017 ஆம் ஆண்டும் இகோர் தமது மனைவியை கழுத்தை நெரித்து கொல்ல முயன்றுள்ளார். ஆனால் மூன்று நாட்கள் தீவிர சிகிச்சையில் இருந்து அவர் மீட்கப்பட்டார்.
பின்னர் நடந்த விசாரணையில் படுக்கையறை விளையாட்டில் தாம் மயக்கமுற்றதாகவும் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் வியாழனன்று, அது படுக்கையறை விளையாட்டல்ல, உண்மையில் தமது மனைவியை கொல்ல முயன்றதாகவும் இகோர் வெளிப்படுத்தியுள்ளார்.
கொலை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள இகோருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க அரசு தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கின் தீர்ப்பு திங்களன்று அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.