அமெரிக்காவில் வேலையின்மை அதிகரித்து வருவதையடுத்து, வேலைவாய்ப்பை உள்நாட்டு மக்களுக்கு வழங்கும் நோக்கில் ஹெச்-1பி விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்கள் வழங்குவதை இந்த ஆண்டு இறுதிவரை நிறுத்திவைத்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிகாரபூர்வமாக உத்தரவிட்டார். இதனைக் கண்டித்து, சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் ஐ.டி. ஊழியர்களின் கூட்டமைப்பான UNITE அறிக்கை வெளியிட்டுள்ளது.


ஹெச்1பி விசா மூலம் இந்தியா, சீனாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப மென்பொறியாளர்கள்தான் அதிகமாக அமெரிக்க நிறுவனங்களுக்குப் பணிக்குச் செல்கின்றனர். இந்த விசா வழங்குவதை அமெரிக்கா நிறுத்தியுள்ளதால், இந்திய ஐடி பொறியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மேலும், விசா பெற்றவர்களும் இந்த ஆண்டு இறுதிவரை செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அரசின் இந்த முடிவை கண்டித்து, UNITE என்கிற Union of IT & ITES Employees அமைப்பு இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த அறிக்கையில், "கொரோனா பெருந்தொற்றும், அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும் உலகத்தை உலுக்கிவரும் நிலையில், H-1B, H-4, L-1 மற்றும் இன்னபிற விசாக்களை அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச நிதி முதலீடுகளுடன் அனைத்து தொழில்துறைகளும் பிணைந்திருக்கும் நிலையில், அமெரிக்க அரசின் தற்காப்புப் பொருளாதாரக் கொள்கையானது (protectionism), அந்நாட்டின் தற்போதைய பொருளாதார சிக்கல்களை சரிசெய்ய இயலாது.
அதிகரித்து வரும் பொருளாதார சமத்துவமின்மையின் அடிப்படை காரணிகளை கருத்தில் கொள்ளாமல், புலம்பெயர்ந்த தொழில்நுட்பவியலாளர்கள் மீது பழி சுமத்துவது என்பது, மக்களை தவறாக வழி நடத்துவது ஆகும். இதன் காரணமாக, அமெரிக்காவின் பொருளாதார நிலைமை மேலும் சீர்குலைவை சந்திக்கும். அதன் தாக்கம் உலகளாவிய வர்த்தகத்திலும் எதிரொலிக்கும்.
எனவே, இந்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு ட்ரம்ப் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அமெரிக்க அரசின் உத்தரவை திரும்பப் பெற வழிவகை செய்ய வேண்டும். இந்திய ஐடி மற்றும் ஐடிஈஎஸ் (ITES) துறை, உலக வர்த்தகத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது. அமெரிக்காவின் இது போன்ற நடவடிக்கைகள் இந்திய ஐடி தொழில் துறையினர் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும்.
இதன் தொடர்ச்சியாக, இந்திய ஐடி தொழில்துறையினருக்கு வேலைபறிபோகும் நிலை ஏற்படாதவாறு மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
உலக முழுவதும் பரவி வாழும் ஐடி மற்றும் ஐடிஈஎஸ் தொழிலாளர்களுக்கு, சாதி, மதம், நிறம், பாலினம், தேசம், இனம் ஆகியவற்றை கடந்து UNITE அமைப்பு ஆதரவு அளிக்கிறது.
உலக முழுவதும் உள்ள ஐடி மற்றும் ஐடிஈஎஸ் ஊழியர்கள் ஒன்றிணைந்து, இந்த இரு பேரிடர்களிடமிருந்தும் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டுமென UNITE கேட்டுக்கொள்கிறது."

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.