ஹெச்-1பி விசா நிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வேலையின்மை அதிகரித்து வருவதை அடுத்து, வேலைவாய்பை உள்நாட்டு மக்களுக்கு வழங்கும் நோக்கில் ஹெச்-1பி விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்கள் வழங்குவதை இந்த ஆண்டு இறுதிவரை நிறுத்திவைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நாளை (24.06.2020) முதல் அமலுக்கு வர உள்ளது.இந்த நிலையில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இதுகுறித்து ட்விட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், ‘அமெரிக்க பொருளாதாரம் உலகளவில் மிகச் சிறப்பான நிலையை அடைந்ததற்கும், வெற்றி பெற்றதற்கும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் பங்களிப்பு அதிகம். அமெரிக்காவுக்குள் வேலைக்காக வரும் வெளிநாட்டினரை தடுக்கும் வகையில் ஹெச்-1பி விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்களை நிறுத்தி வைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறப்பித்த உத்தரவு எனக்கு அதிருப்தி அளிக்கிறது. வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்களுக்கு எனது ஆதரவு தொடரும். அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்’ என ஹெச்-1பி விசா தொடர்பான தனது அதிருப்தியை சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.