வெடிபொருள் கலந்த அன்னாசி பழத்தை சாப்பிட்ட  கர்ப்பிணி யானை நிகழ்வே இன்னும் முடியாத நேரத்தில் தற்போது இமாச்சலப் பிரதேசத்தில் கர்ப்பிணி பசு ஒன்று அதேபோல் கோதுமை மாவில் வெடிமருந்து கலந்து கொடுத்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்று காட்டுப்பகுதியில் கீழே இருந்த அன்னாசி பழத்தை சாப்பிட்டு வாய் பகுதி வெடித்து இறந்தது. மேலும் வலி தாங்கமுடியாத அந்த பெண் யானை காட்டுப்பகுதியில் வாய் முழுவதும் நனைத்தவாரு பல மணி நேரம் நின்றிருந்தது பின் தாயும், வயிற்றில் இருந்த குட்டி யானையும் இறந்த செய்தி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இன்னும் அந்த சம்பவத்தின் முழுமையான பின்னணியே அறியாத சூழலில் இதற்கு முன்பே ஒரு சம்பவம் கர்ப்பிணி பசு மாட்டிற்கு நடந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தின் ஜன்துட்டா பகுதியில் குர்டியல் சிங் என்பவர் தன் வீட்டில் மாடுகளை வளர்த்து அதன் மூலம் தன் குடும்ப பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார். கடந்த மே மாதம் 26 ஆம் தேதி தீடீரென குர்டியல் வளர்த்து வந்த கர்ப்பிணி பசு ஒன்றின் வாயில் இருந்து இரத்தம் வந்துள்ளது. இதனால் பசுவினால் உணவினை உண்ண முடியாத நிலை ஏற்பட்டது.

அதற்கு சிறிது நேரம் முன் தான் வீட்டில் கொட்டிவைக்கப்பட்டிருந்த கோதுமை மாவு உருண்டைகளை பசு சாப்பிட்டுள்ளது. இந்நிலையில் கோதுமை மாவு கட்டிகளை ஆராய்ச்சி செய்ததில் அதில் வெடிமருந்து கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
கர்ப்பிணி பசு மாட்டின் உரிமையாளர் குர்டியல் சிங், தனது பக்கத்து வீட்டுக்காரர் தான் வெடிபொருட்களால் நிரப்பப்பட்ட கோதுமை மாவு பந்தை பசுவிற்கு உணவளித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். அதையடுத்து இந்திய விலங்குகள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த இமாச்சலப் பிரதேச காவல்துறை விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் இவ்வாறு ஈவு இரக்கமின்றி செய்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூடுதலாக அக்கம்பக்கத்தில் இருக்கும் பயிர்களை அழித்ததால் நில உரிமையாளர்கள், பசுவைக் கொல்ல முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.