டிக்-டாக் மோகத்தால் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் பெருகி வரும் நிலையில், அதன்மூலம் பழக்கம் ஏற்பட்டு 2 குழந்தைகளையும், கணவரையும் தவிக்க விட்டு விட்டு கள்ளக்காதலனை தேடி வந்த பெண்ணால் தாரமங்கலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூரை சேர்ந்தவர் முருகன் (வயது 37). எலக்ட்ரீசியன். இவரது மனைவி ஆனந்தி (22). இவர்களுக்கு 7 மற்றும் 5 வயதில் 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சியை சேர்ந்த கோவிந்தராஜ் (26) என்பவருக்கும், ஆனந்திக்கும் டிக்-டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

அப்போது கோவிந்தராஜ் ஒரு முகவரியை கொடுத்து அங்கு வருமாறு அடிக்கடி கூறி வந்தார். இதனை நம்பிய ஆனந்தி நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி கோவிந்தராஜ் கொடுத்த முகவரியான தாரமங்கலம் அருகே உள்ள பாப்பம்பாடிக்கு வந்தார்.
அங்கு கோவிந்தராஜ் இல்லாததால் அந்த வீட்டில் இருந்த பெண்ணிடம் ஆனந்தி விசாரித்தார், அப்போது அந்த பெண் கோவிந்தராஜின் சகோதரி என்பதும், கோவிந்தராஜ் முகவரியை மாற்றி கொடுத்ததும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆனந்தி சம்பவம் குறித்து கோவிந்தராஜின் சகோதரியிடம் தெரிவித்தார்.

இதனை கேட்ட கோவிந்தராஜின் சகோதரி ஆனந்தியை தாரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து ஆனந்திக்கும், செல்போன் மூலம் கோவிந்தராஜுக்கும் போலீசார் அறிவுரை வழங்கினர். மேலும் ஆனந்தியின் கணவரான முருகனுக்கும் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, போலீசாரின் அறிவுரைப்படி ஆனந்தியை அவரது கணவருடன் ஒப்படைக்க மோட்டார் சைக்கிளில் வைத்து கோவிந்தராஜின் சகோதரியும், அவரது கணவரும் விழுப்புரத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு காத்திருந்த ஆனந்தியின் கணவர் முருகனிடம் ஆனந்தியை ஒப்படைத்தனர். பின்னர், ஆனந்தியை அவர் அழைத்து சென்றார்.

டிக்-டாக் மோகத்தால் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் பெருகி வரும் நிலையில் அதன்மூலம் பழக்கம் ஏற்பட்டு 2 குழந்தைகளையும் கணவரையும் தவிக்க விட்டு விட்டு கள்ளக்காதலனை தேடி வந்த பெண்ணால் நேற்று இரவு தாரமங்கலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.