பச்சிளம் குழந்தைக்கு முகத்தை மாஸ்க்கால் மூடியும், வாயில் எலும்புத் துண்டை வைத்தும் விபரீதமான முறையில் டிக்டாக் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வரும் வில்லங்க டிக்டாக் குடும்பத்தின் செயல் தமிழகத்தை அதிரவைத்துள்ளது.


ஓசூரில் டிக்டாக்கிற்கு அடிமையானதால், தங்களது வீட்டில் உள்ள பச்சிளம் குழந்தைக்கு டிக்டாக்கில் லைக்ஸ் வரவேண்டும் என்பதற்காக படாத பாடு படுத்தி வந்துள்ளது ஒரு குடும்பம். அதில் பால் குடிக்கும் பச்சிளம் குழந்தையின் உதட்டில் லிப்ஸ்டிக் பூசியிருப்பது போல கிராபிக்ஸில் டிக்டாக் எடுத்தும் பின்னர், சமைத்த அசைவ உணவில் இருந்து மசாலாவுடன் கூடிய இறைச்சி ஒன்றின் பெரிய எலும்பு துண்டினை எடுத்து மல்லாக்க படுக்கவைக்கப்பட்ட குழந்தையின் வாயில் உறிஞ்ச வைத்து வீடியோவாக டிக்டாக்கில் பதிவிட்டுள்ளனர்.

இந்த சேட்டையெல்லாம் தாண்டி, உச்சபட்சமாக கொரோனாவை எதிர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகக் கூறி, தங்கள் வீட்டில் உள்ள சிறுவன் மூலமாக அந்த குழந்தையின் முகத்தை துணி மாஸ்க்கால் இழுத்து மூடவும் வைத்துள்ளனர். இதனால் ஒரு கட்டத்தில் மூச்சுவிடமுடியாமல் குழந்தை ஒன்று திணறி அழுக, அந்த சிறுவனோ சிரித்தபடியே குழந்தைக்கு மாஸ்க்கை கட்டிவிட, இந்த காட்சிகளை சமூக வலைதளத்தில் பார்த்த பலரும் கண்டித்து வருகின்றனர்.