நெற்றியில் பொட்டு, கையில் வளையல் அணிய மனைவி மறுத்ததால் விவாகரத்து வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாமில் கடந்த 2012ம் ஆண்டு திருமணமான தம்பதி ஓர் ஆண்டிலேயே பிரிந்தனர். 2013ம் ஆண்டு கணவர் வீட்டை விட்டு வெளியேறிய மனைவி, கணவர் குடும்பத்தினர் தன்னை துன்புறுத்துவதாக புகார் அளித்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கணவரையும், அவரது குடும்பத்தாரையும் விடுதலை செய்தது. இதனை அடுத்து குடும்பநல நீதிமன்றத்தில் கணவர் விவாகரத்து கேட்டு மனு கொடுத்தார். அதில், ‘கூட்டுக்குடும்பத்தை விட்டு தனிக்குடித்தனம் போக மனைவி வற்புறுத்தினார். அதற்கு மறுத்ததால் தாம்பத்ய உறவு பாதிக்கப்பட்டு குழந்தைகள் இல்லை. அடிக்கடி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதனால் நான் துன்பப்படுகிறேன்’ என கணவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த மனுவை குடும்பநல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


இதனை அடுத்து உயர்நீதிமன்றத்தில் கணவர் மேல் முறையீடு செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, ‘கணவரும் அவரது வீட்டாரும் தன்னைக் கொடுமைப்படுத்தியதாக மனைவி கூறிய புகார் நிரூபிக்கப்படவில்லை. இந்து திருமண முறையில் முக்கியமாக கருதப்படும் நெற்றித் திலகத்தையும், வளையலையும் அணிய மறுக்கிறார் என்று கணவர் கூறிய குற்றச்சாட்டை மனைவி மறுக்கவில்லை. பொட்டு வைக்க மறுப்பதும், வளையலையும் அணிய மறுப்பதும் கணவருடனான திருமணத்தை ஏற்கவில்லை என்பதைக் குறிக்கிறது. கணவர் மற்றும் அவர் வீட்டார் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதும் கொடுமைப்படுத்துவதற்கு ஒப்பாகும். அதேநேரம், விருப்பமில்லாத மனைவியுடன் சேர்ந்து வாழச் சொல்வதும் துன்புறுத்துவது போன்றதாகும். எனவே இந்த வழக்கில் விவாகரத்து வழங்கப்படுகிறது’ என தெரிவித்தனர்