இந்தியா மற்றும் சீனா எல்லைப்பகுதியான லடாக்கில் நடந்த தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்த அதே சமயம், சீனாவைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட வீரர்களும் இறந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் வரும் 19 -ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. இதனிடையே எல்லைப் பிரச்சனைகள் குறித்து, பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் காணொலி வாயிலாக இன்று உரையாற்றினார்.

அதில், “இந்தியா அமைதியையே என்றும் விரும்புகிறது. அதே சமயம் இந்தியாவை சீண்டினால் அதற்கு தகுந்த பதிலடிகளைக் கொடுக்கவும் இந்தியா திறன் வாய்ந்தது என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் வேண்டாம். சீனாவுடன் போராடி உயிரிநீத்த, நாட்டின் பெருமை மிகு வீரர்களாகிய ராணுவ வீரர்களின் தியாகம் வீணாகாது என்றும் உறுதியளிக்கிறேன். ஒருபோதும் நாங்கள் யாரையும் தூண்டிவிடுவது இல்லை. அதேபோல் எங்கள் நாட்டின் இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும்  களங்கம் வந்தால், அதைப் பாதுகாப்பதில் எங்கள் திறன்களை நாங்கள் நிரூபித்துள்ளோம். தியாகமும் அமைதியும் மட்டுமல்ல, வீரமும் தைரியமும்கூட எங்கள் நாட்டின் குணம்தான்!” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் சீனா வெளியிட்டுள்ள மற்றுமொரு அறிக்கையில், சீனாவும் இந்தியாவுடனான மோதல்களைத் தவிர்க்க விரும்புவதாவும், முன்வரிசையில் இருக்கும் படைகளை இந்தியா கட்டுப்படுத்த வேண்டும் என்றும், எல்லைகளை வீரர்கள் சட்டவிரோதமாக கடப்பது உள்ளிட்ட எவ்வித ஆத்திரமூட்டும் செயல்களையும் செய்யக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் எல்லையில் உள்ள பிரச்னைகளை தீவிரமாக்கும் வகையிலான ஒருதலைபட்ச நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என்று குறிப்பிடும் சீனா, மேற்கொண்டு மோதல்களைக் காண விரும்பவில்லை என்று கூறியுள்ளது.