இந்தியா, சீனா இடையிலான உயர்மட்ட அளவிலான உடன்படிக்கையை சீனா மீறி விட்டதாக மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், இந்திய எல்லைப்பகுதிக்குள் சீன ஹெலிகாப்டர்கள் அத்துமீறி பறப்பது அதிகரித்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தனது எல்லைக்குள்ளேயே இந்தியா தனது செயல்பாட்டை மேற்கொண்டதாகவும், இந்தியாவை போலவே சீனாவும் செயல்படும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், லடாக் எல்லை பகுதியில் இரு நாடுகளும் அமைதியை பேணுவது மிகவும் அவசியம் எனவும் லடாக் எல்லை நிலைமையை ஒருதலைபட்சமாக சீனா மாற்ற முயன்றதே பிரச்சினைக்கு காரணம் எனவும் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்திய எல்லைப்பகுதிக்குள் சீன ஹெலிகாப்டர்கள் அத்து மீறி பறப்பது அதிகரித்து உள்ளதாக ஏ.ஏன்.ஐ., செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து இந்திய-சீன எல்லைப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இப்பிரச்னை குறித்து, முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படைகளின் தளபதிகளுடன், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று ஆலோசனை நடத்தினார். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இக்கூட்டத்தில் பங்கேற்றார். அதன்பின், எல்லையில் நடந்த சம்பவங்கள் மற்றும் அங்குள்ள நிலைமை குறித்தும், பிரதமர் நரேந்திர மோடியிடம், ராஜ்நாத் சிங் விளக்கினார்.