அண்டை வீட்டாரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 16 வயது சிறுமி தன் குடிசையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவத்தால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


உத்தரப்பிரதேசத்தின் காசிப்பூர் மாவட்டத்தின் காசிமாபாத் பகுதியில் கடந்த ஜூன் 15 ஆம் தேதி இரவு, தன் குடிசை பகுதிக்கு அருகில் உள்ள குட்டைக்கு 16 வயது சிறுமி தண்ணீர் எடுக்க சென்றுள்ளார். இதனைக் கண்ட அவரின் பக்கத்து வீட்டுக்காரர் முனிஷ் சவுகான் என்பவர் மற்றும் அவரது நண்பர் கன்ஷ்யம் யாதவ் இணைந்து அச்சிறுமியை கடத்தியுள்ளனர்.
கடத்திய சிறுமியை கன்ஷ்யம் யாதவ் தனக்கு சொந்தமான லாரியில் இருவரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். கடத்திய இருவரும் வாகனத்திற்குள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அங்கிருந்து வீட்டிற்கு தப்பித்து சென்ற சிறுமி தன் குடும்பத்தாரிடன் நடந்ததை எல்லாம் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை பக்கத்து வீட்டுக்காரர் சவுகானின் வீட்டிற்குச் சென்றுள்ளார், ஆனால் சவுகானின் குடும்பத்தினர் அவரை அச்சுறுத்தியுள்ளனர்.
அதையடுத்து காசிமாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் சிறுமியின் தந்தை. இந்நிலையில் சிறுமியை வன்கொடுமைக்கு ஆளாக்கிய இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 376 (கற்பழிப்பு) மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஜூன் 18 ஆம் தேதி வியாழன் காலை, மருத்துவ பரிசோதனைக்காக விசாரணை அதிகாரிகள் சிறுமியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த சிறுமி சிறிது நேரத்திற்கு பிறகு தன் குடிசைக் கட்டையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதையறிந்த அப்பகுதி மக்கள் கொந்தளித்து சாலையில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காசிப்பூர் எஸ்.பி. போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்களை சமாதானம் செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக்கொடுப்பதாக உறுதியளித்த பின் கிராம மக்களால் கலைந்து சென்றனர்.