லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா படைகள் இடையே தொடர்ந்து பிரச்சினை நிலவி வருகிறது. கொரோனா களேபரத்தால் உலக நாடுகள் நடுங்கிக்கொண்டு இருக்க கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் இந்திய எல்லையை ஆக்கிரமிக்க சீனா முயன்று வருகிறது.


சமீபத்தில் இரு நாட்டினருக்கும் ஏற்பட்ட மோதலில் இந்தியா தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதேபோல சீனா தரப்பிலும் 40 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கல்வான் எல்லைப்பகுதியில் இருந்து சீனா பின்வாங்கியதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் சீனா பின்வாங்கவில்லை என்று தெரிகிறது. கல்வான் ஆற்றில் உள்ள மெய்யான கட்டுப்பாட்டு கோட்டின் இருபுறமும் சீன படைகள் நிறுத்தப்பட்டிருப்பது செயற்கைக்கோள் படங்களின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த படங்களில் முன்பு இல்லாத வகையில் சீனாவின் தங்குமிடங்கள் உள்ளிட்ட முகாம்கள் கட்டமைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
மோதல் நடைபெற்ற பகுதியில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் சீனா படைகளை குவித்துள்ளது. இதையடுத்து மோதல் நடைபெற்ற பகுதியின் அருகே இந்தியாவும் படைகளை குவித்து வருகிறது. செய்வதை எல்லாம் செய்துவிட்டு இந்தியா தான் எல்லையை மீறுவதாகவும் மோதலுக்கு இந்தியாவே பொறுப்பேற்க வேண்டும் என்றும் குற்றஞ்சாட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.