இறந்து போனதாக நினைத்த ராணுவ வீரர் உயிருடன் இருக்கும் செய்தி அவரது குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


கல்வானில் நடைபெற்ற எல்லைத்தாக்குதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். இது நாடு முழுவதும் உள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவியதை அடுத்து இரண்டு நாடுகளும் தங்களது வீரர்களை எல்லையில் இருந்து விலக்கிக் கொண்டனர்.

இந்த நிலையில் ராணுவத்தாக்குதலில் இறந்து போனதாக கருதப்பட்ட ராணுவ வீரர் ஒருவர் அவரது வீட்டிற்கு தொலைபேசி செய்து தான் உயிருடன் இருப்பதை தெரிவித்து இருக்கிறார். பீஹார் மாநிலம் சரண் மாவட்டம் திக்ரா கிராமத்தை சேர்ந்தவர் ராணுவ வீரர் சுனில் குமார்.

கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற தாக்குதலில் இவரும் இறந்து விட்டதாக செய்தி வெளியானது. ஆனால் வேறு ஒரு ராணுவ வீரருக்கு பதிலாக தவறுதலாக இவரது பெயர் இடம்பெற்று விட்டது. இது தெரியாமல் அவரது மனைவி, குழந்தை, உறவினர்கள் என மொத்த கிராமத்தினரும் துக்கத்தில் மூழ்கினர்.

இதற்கிடையில் தான் சுனில் தொலைபேசியில் தான் உயிருடன் இருக்கும் விவரத்தை தெரிவித்து இருக்கிறார். இந்த தகவலை ராணுவப்பிரிவு சுனிலின் சகோதரர் அணிலுக்கு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுனிலின் மனைவி மேனகா, '' சுனிலின் குரல் மறுபுறம் கேட்டது. எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவரது குரலைக் கேட்டு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்,'' என தெரிவித்து இருக்கிறார்.