ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியை அடுத்த, வீரவனூரைச் சேர்ந்த திருமணமான 25 வயது பெண் ஒருவர் வீட்டில் இருந்து ஸ்கூட்டியில் சென்று, பூவிளத்தூர் சாலை பகுதியில் தனது அத்தை மகனுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.


இவரை, பின் தொடர்ந்த 6 பேர் கொண்ட கும்பல், இவர்களை வீடியோ எடுத்ததுடன், அந்த பெண்ணிடமே சென்று, “கணவனை விட்டுவிட்டு வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருக்கிறாயா? இந்த வீடியோவை உன் கணவரிடம் காட்டுகிறோம்” என்று மிரட்டியதோடு, அப்பெண்ணைக் கடத்திச் சென்ற கும்பல், நகை, பணத்தை பறித்துக்கொண்டு, ஏடிஎம்மில் இருந்து 5 ஆயிரம் பணத்தையும் பறித்துக்கொண்டு நடுவழியில் இறக்கிவிட்டுள்ளனர். இதனை அடுத்து அப்பெண்ணின் உறவினர் மூலமாக ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் பிரத்தியேக புகார் பிரிவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் தனிப்படை அமைத்த காவல்துறையினர், அந்த மிரட்டல் கும்பலைச் சேர்ந்த முகமது, இளஞ்செழியன், சேதுபாண்டி, தனசேகரன், காளிதாஸ், விஷ்ணு உள்ளிட்ட 6 பேரை சுற்றிவளைத்து பிடித்து, அவர்களிடம் இருந்த செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். அந்த செல்போன்களில் ஏராளமான பெண்களின் அந்தரங்க வீடியோக்களும் இருந்தன. இவர்களை விசாரித்ததில், தெரியவந்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.  அதன்படி, இருசக்கர வாகனங்களில் தனியாக போகும் மாணவிகள், திருமணமான பெண்கள், காதலில் விழும் கல்லூரி மாணவிகள், கணவர் வெளிநாட்டில் இருக்கும்பட்சத்தில் ஆண் நண்பர்களுடன் பழகும் பெண்கள் உள்ளிட்டோரை பின் தொடர்ந்து அவர்கள் ஆண் நண்பர்களுடன் தனிமையில் இருக்கும்போது வீடியோ எடுத்து, பின்னர் அப்பெண்கள் தனியே செல்லும்போது வழிமறித்து வீடியோக்களை காட்டி, மிரட்டி, நகை, பணம் உள்ளிட்டவற்றை இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் பறிப்பார்கள். மேலும் பலமுறை அந்த வீடியோக்களை காட்டி பணம் பறிப்பதோடு, கணவரை பிரிந்த அல்லது கணவர் இறந்த பெண்களாக இருந்தால் அவர்களை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கும் உட்படுத்துவார்கள் என்கிற உண்மைகள் தெரியவந்துள்ளன. அதுமட்டுமல்லாமல், சில பெண்களை புகைப்படம் எடுத்து மார்ஃபிங் செய்தும், சில பெண்களை கடத்தி அரை நிர்வாணமாக புகைப்படம் எடுத்தும், சமூக வலைதளங்களில் அப்லோடு செய்வதாகk கூறி மிரட்டி, இவர்கள் பணம் பறித்துள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தையும், நாகர்கோவில் காசி சம்பவத்தையும் மிஞ்சும் வகையில், தினம் தினம் பெண்களை மிரட்டி பணம், பலாத்காரம் என்று கொடூரம் செய்துவந்த இந்த கும்பல், பரமக்குடி பகுதியில், மயில் உள்ளிட்ட விலங்கினங்களை வேட்டையாடி உண்பதை வழக்கமாகக் கொண்டதோடு, கஞ்சா மற்றும் மதுபோதையுடன் சுற்றிவந்ததற்கான புகைப்படங்கள் வலம் வருகின்றன. இந்த பலாத்கார கும்பலிடம் நகை, பணம் உள்ளிட்டவற்றை இழந்திருந்தாலோ, பலாத்காரத்துக்கு உள்ளாகியிருந்தாலோ அவர்கள் தாமாக முன்வந்து புகார் அளிக்கும் பட்சத்தில் அவர்களின் தனிவிபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.