பாம்பு கடித்து இறந்த கேரளா இளம்பெண் வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


கேரள மாநிலம் அஞ்சல் பகுதியை சேர்ந்த உத்ரா என்னும் இளம்பெண்ணை அவரது கணவர் பாம்பை விட்டு கடிக்க வைத்து கொலை செய்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதல்முறை பாம்பு கடித்த போது உத்ரா சத்தம் போட்டு அலறி இருக்கிறார். அதனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பிழைக்க வைத்து விட்டனர்.

இதனால் 2-வது முறை அவருக்கு பாயாசம், பழச்சாறில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்து, பாம்பை கடிக்க வைத்து சத்தம் போடாமல் அவரை கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் சூரஜ் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து சூரஜ் மற்றும் அவருக்கு பாம்பு கொடுத்து உதவிய சுரேஷ் இருவரையும் போலீசார் கைது செய்தனர். உத்ராவை கடித்த பாம்பும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் உத்ராவை கடித்த கருநாக பாம்பு எங்கிருந்து கிடைத்தது என்பதையறிய வனத்துறை அதிகாரிகள் சூரஜ், சுரேஷ் இருவரையும் 7 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில்  ஆற்றிங்கல்லில் வைத்து சுரேஷ் கருநாக பாம்பை பிடித்ததாக தெரிய வந்துள்ளது. மேலும் அங்கிருந்த பாம்பின் 10 முட்டைகளையும் அவரே எடுத்து சென்று, வீட்டில் அடைகாத்து குஞ்சு பொரிக்க வைத்துள்ளார் என்றும் தகவல் கிடைத்துள்ளதாம். அந்த குஞ்சுகளை அவரே ரகசியமாக வளர்த்து வருகிறாரா? இல்லை வெளியே விட்டு விட்டாரா? என்பதையறிய தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்து இருக்கின்றனர்.