கொரோனா அச்சுறுத்தலிலிருந்து உலகம் இன்னும் மீளாத நிலையில், சீனாவில் பன்றிகளிடையே பரவும் புதிய காய்ச்சல் மனிதர்களைத் தாக்கலாம் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.
2019 டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டம் காண வைத்துள்ளது. இதுவரை 1 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5 லட்சம் பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளார்கள். உலக நாடுகள் பலவும் கடும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில், பல நாடுகளில் ஊரடங்கு இன்னும் அமலில் உள்ளது. கொரோனா ஏற்படுத்திய தாக்கம் மற்றும் பாதிப்பு இன்னும் அடங்குவதற்குள் அடுத்த அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.


கொரோனா வைரஸ் போன்று பெருந்தொற்றாக மாற வாய்ப்புள்ள காய்ச்சல் ஒன்று  சீனாவில் பன்றிகளிடையே தற்போது பரவி வருகிறது. ஆனால் இந்த நோய் எந்த நேரத்திலும் மனிதர்களைத் தாக்கலாம் என்ற அதிர்ச்சி தகவலை ஆய்வாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளார்கள். இது தற்போது மனிதர்களிடையே பரவவில்லை என்றாலும், பின் வரும் காலங்களில் எப்போது வேண்டுமானாலும் இது மனிதர்களிடையே பரவும் வாய்ப்புண்டு. இக்காய்ச்சல் கொரோனா வைரஸ் தொற்று போல உலகப் பெருந்தொற்றாக மாறும் அச்சுறுத்தல் உள்ளது என ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
இதனிடையே இதில் அச்சம் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், இது புதுவிதமான நோய் என்பதால்  மனிதர்களுக்கு இதை எதிர்கொள்ள நோய் எதிர்ப்புச் சக்தி என்பது இருக்காது. இதனால் தற்போது எந்த ஆபத்தும் இல்லை என்றாலும், இதனைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இந்த வைரஸானது ஜி4 இஏ எச்1என்1 என ஆராய்ச்சியாளர்களால் அழைக்கப்படுகிறது.