பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர்.


குறித்த விபத்து நேற்றைய தினம் (14) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாமங்கடை ஈஸ்வரி வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதோடு, வெகன் ஆர் ரக மகிழூர்தியும் ஸ்போர்ட்ஸ் ரக அதி சொகுசு மகிழூர்தி ஒன்றுமே இவ்வாறு மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தில் உயிரிழந்த நபர் வெகன் ஆர் ரக மகிழூர்தியில் பயணித்த பெண்ணொருவர் எனவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த வாகனத்தின் சாரதியான உயிரிழந்த பெண்ணின் கணவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி களுபோவில மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் உயிரிழந்த பெண் பிரபல சிங்கள சினிமா இயக்குனரான சந்ரரத்ன மாபிடிகமகேவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்போர்ட்ஸ் ரக மகிழூர்தியில் பயணித்த நபர், கிரான்ட்பாஸ் பகுதியில் வசித்து வருபவர் என்பதோடு தற்போது அவர் லங்கா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த விபத்து சம்பவம் அருகில் இருந்த சிசிடீவி கமராவில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.