கொரோனா வைரசால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்து மருந்தை இறக்குமதி செய்துள்ளது தமிழகம்.


இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை இன்றோடு 3,71,589யை எட்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 52,189 என்ற எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதில் தற்போது சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 23,829 ஆகும். 27,782 பேர் கொரோனா வைரஸின் பாதிப்பிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 578 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அமெரிக்காவில் இருந்து 'டோசிலிசுமாப்' என்ற சிறப்பு மருந்து இறக்குமதி செய்துள்ளது தமிழ்நாடு அரசு. தற்போது ரெம்டெசிவர் போன்ற மருந்துகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தாலும், அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்புகளை தடுப்பதில் டோசிலிசுமாப் மருந்து நன்றாக செயல்படுவதால் தமிழக அரசு அமைத்துள்ள மருத்துவக்குழுவின் பரிந்துரையின்படி தமிழக அரசு இந்த முடிவெடுத்துள்ளது.

சென்னையில் கொரோனா தடுப்பிற்காக செயல்படும் அரசு மரத்துவமனைகளான ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் சோதனை முறையில் பயன்படுத்த டோசிலிசுமாப் மருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும்  முதற்கட்டமாக டோசிலிசுமாப் (Tocilizumab) 100 மருந்து பாட்டில்கள் அமெரிக்காவிலிருந்து தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஐ.வி., மூலம் செலுத்தப்படும் இந்த மருந்தின் விலை ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் வரை எனவும் கூறப்படுகிறது.