லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய, சீன வீரர்களிடையே மிகப்பெரிய மோதல் நடந்த நிலையில், சீனர்கள் புல்டோசர்கள் மூலம் என்ன செய்தார்கள் என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகத் தெரியவந்துள்ளது.


ஜூன் 15 அன்று இந்திய வீரர்கள் மீது நடந்த தாக்குதலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. அன்று மாலை கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு வந்த சீன வீரர்களும், இந்திய வீரர்களும் மோதிக் கொண்டார்கள். அப்போது சில இந்திய வீரர்கள் சிலர் அப்பகுதியில் உள்ள குன்றிலிருந்து தூக்கி எறியப்பட்டு கொல்லப்பட்டார்கள். மேலும் சில வீரர்கள் கல்வான் ஆற்றில் விழுந்து உயிர் இழந்ததா தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில் நதி உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடக்கும்போது அது வெறுமனே வறண்டு ஓடிக்கொண்டு இருப்பதைச் செயற்கைக் கோள் படங்கள் தற்போது காட்டிக் கொடுத்துள்ளது. இதுதொடர்பாக என்.டி.டிவி செய்தி நிறுவனத்திற்குக் கிடைத்துள்ள பிரத்தியேக செயற்கைக்கோள் புகைப்படங்களில், சீனர்கள் புல்டோசர்களை கொண்டு கல்வான் ஆற்றின் ஓட்டத்தை மாற்றி வருவது தெரியவந்துள்ளது. புல்டோசர்கள் காணப்படும் இடத்திலேயே ஆற்றின் ஓட்டம் மாறுவதைக் காணமுடிகிறது.


இதுதொடர்பாக கருத்து தெரிவிக்க ஊடகம் சார்பில் சீன தூதரகத்தை அணுகியுள்ளது. இதனிடையே சர்ச்சைக்குரிய  இடத்தில் லாரிகள், இராணுவ போக்குவரத்து மற்றும் புல்டோசர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சீன வாகனங்களைப் படங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.