“கழுகு பார்வை” என்ற போலியான முகநூல் கணக்கின் ஊடாக சட்டத்தரணியின் கடமையினை சுதந்திரமாக செய்யவிடாமல் அச்சுறுத்தும் விதமாக பதிவுகளை முகநூலில் பதிவேற்றினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மன்னார் நீதவான் மா.கணேஷராஜா எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவுட்டுள்ளார்.


மன்னார் தனியார் வாடகை வாகன உரிமையாளர் சங்கத்தினரால் தங்களுக்கு வாகனத்தரிப்பிடம் ஒன்று வேண்டுமென மன்னார் நகரசபைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த வழக்கினை சிரேஷ்ட சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் வாதாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் குறித்த வழக்கு இணக்கமாக தீர்க்கப்பட்டு கைவாங்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்கையில் வழக்கு நிலுவையில் இருந்த காலப்பகுதியில் மேற்படி போலி முகநூல் ஊடாகவும், இன்னும் ஒருசில முகநூல் ஊடாகவும் குறித்த சட்டத்தரணிக்கு அவதூறு ஏற்படுத்தும் விதமாகவும், அச்சுறுத்தும் விதமாகவும் பல்வேறு பதிவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இதற்கு எதிராக பா.டெனிஸ்வரன் மேற்கொண்ட நடவடிக்கையின் பொருட்டே மேற்படி சந்தேகநபர் மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே மேற்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்விடயம் தொடர்பாக பா.டெனிஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்,
தற்போது முகநூல் ஊடாக பல்வேறு நன்மையான விடயங்கள் காணப்படுகின்றன, உதாரணமாக கல்வி, மருத்துவம், சட்டம், மற்றும் அறிவியல் சார்ந்த பல ஆரோக்கியமான கருத்து பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன.
இருந்த போதும் ஒருசிலர் முகநூலை பிழையாக பயன்படுத்துகின்றனர். அவதூறான வார்த்தைப்பிரயோகங்கள், இரு சமூகங்களை பிளவு படுத்துவது போன்ற பதிவுகள், மற்றும் மத துவேசத்தை உண்டுபண்ணுகின்ற பதிவுகள் போடப்படுகின்றன.
இது எதிர்காலத்தில் எமது சமூகத்தை சீரழிக்கும் விடயமாக இருக்கப்போகின்றது. எனவே இதனை நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும்.
முகநூலை பிழையாக பயன்படுத்தினால், தண்டனை மற்றும் நஷ்ட ஈடு கொடுக்க நேரிடும் என்ற விழிப்புணர்வு மக்களுக்கு சென்றடைய வேண்டும்.
அதற்கான ஒரு நடவடிக்கையே இதுவாகும் எனவும், மேலும், இவ்வழக்கு தொடர்பில் இன்னும் சிலபேர் கைது செய்யப்படலாம் என்ற நிலை காணப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.