முதன்முதலில் கொரோனா தோன்றிய சீனாவில் தற்போது கொரோனா 2-வது அலை பரவத்துவங்கி இருக்கிறது.


கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் இருந்து பரவிய கொரோனா கிட்டத்தட்ட அரை ஆண்டாக உலக நாடுகளை ஆட்டுவித்து, மக்களை கொன்று குவித்து வருகிறது. இதனால் பொருளாதாரம், வேலை வாய்ப்பு, தொழில்கள், கல்வி, சுற்றுலா என மொத்த துறைகளும் அடிவாங்கி குப்புற கிடக்கின்றன. இன்னும் எந்த நாடும் தடுப்பூசி கண்டுபிடிக்கவில்லை என்பதால் தினம் தினம் அச்சத்துடனேயே மக்கள் வாழும் சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் தற்போது சீனாவில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவத்துவங்கி இருக்கிறது. சீன தலைநகர் பீஜிங்கில் ஜின்பாடி என்ற மொத்த சந்தை உள்ளது. இதில் சீனர்களின் பிரியமான மீனான சால்மன் மீன் வகைகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். சீனர்களுக்கு பிடித்தமான மீன் என்பதால் ஆஸ்திரேலியா, சிலி, பாரோ தீவுகள், நார்வே ஆகிய பகுதிகளில் இருந்து சீனா இறக்குமதி செய்து வந்தது.
ஆனால் தற்போது இந்த மீன்களைக் கண்டாலே சீனர்கள் அலறியடித்து ஓடுகின்றனராம். காரணம் கடந்த வாரம் ஜின்பாடி மீன் சந்தையின் சால்மன் மீன்களை வெட்டும் பலகைகளில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது தான். இதையடுத்து பீஜிங் நகரில் 2-வது அலை பரவத்துவங்கி இருப்பதால் சால்மன் மீனை வாங்கிட தற்போது ஆள் இல்லை. இதையடுத்து பீஜிங் நகர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கட்டு இருக்கிறது.
மேலும் சூப்பர் மார்கெட்டுகள், ஹோட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளில் இருந்து சால்மன் மீன்களை அவசர,அவசரமாக அப்புறப்படுத்தி வருகின்றனராம்.
சால்மன் மீன் என்றாலே பீஜிங் மக்கள் அலறுகிற இந்த தருணத்தில், நோய் கட்டுப்பாட்டுக்கான சீன தேசிய மையத்தின் அவசரகால பதிலளிப்பு பிரிவு துணை இயக்குனர் ஷி குவாகிங் கூறுகையில், ''சால்மன் மீன், சந்தையை அடைவதற்கு முன்பாக கொரோனா வைரஸ் தொற்று இருந்ததற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை. வைரஸ், ஜின்பாடி சந்தையில்தான் இருந்திருக்க வேண்டும்,'' என தெரிவித்து இருக்கிறார்.
உணவின் மூலமாகவோ அல்லது உணவு பானங்களின் வழியாகவோ கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரம் உணவுப்பொருட்களின் பேக்கேஜிங் வழியாக கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.