சென்னையில் நண்பன் மனைவியுடன் தொடர்பில் இருந்த வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.


சென்னை ராயபுரத்தை சேர்ந்த மீன் வியாபாரியான கணேஷ்குமார் (30), கடந்த சில மாதங்களாக திருவள்ளூர் மாவட்டம் மீச்சூர் பகுதியில் சபரிதா என்ற பெண்ணுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் 4 பேர் கொண்ட கும்பலால் கணேஷ்குமார் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது பசுபதி என்பவர் தனது கூட்டாளிகளுடன் மீஞ்சூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில், கணேஷ்குமார் மற்றும் பசுபதி நண்பர்களாக இருந்துள்ளனர். இவர்கள் இருவர் மீது பல குற்ற வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் பசுபதியின் மனைவி சபரிதாவுக்கும், கணேஷ்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை பசுபதி கண்டிக்கவே, சபரிதா அவரிடம் சண்டையிட்டு மீஞ்சூர் பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். இதனிடையே வழக்கில் ஒன்றில் கைதான பசுபதி சிறைக்கு சென்றார். இதனை அடுத்து தனியாக இருந்த சபரிதாவுடன் கணேஷ்குமார் ஒரு மாதமாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்த தகவல் தெரிந்த பசுபதி ஜாமீனில் வெளியே வந்து தனது கூட்டாளிகளுடன் வந்து கணேஷ்குமாரை கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சபரிதாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் சில முக்கிய தகவல்களைக் கூறியுள்ளார். அதில், ‘ஒரு மாதமாக நானும் கணேஷ்குமாரும் சேர்ந்து வாழ்ந்தோம். என் கணவர் பசுபதிக்கும் கணேஷ்குமாருக்கும் வாய்தகராறு இருந்துவந்தது. இந்தச் சமயத்தில்தான் பசுபதி, என்னிடம் நேற்று போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கணேஷ்குமார், உனக்கு பசுபதி ஏன் போன் செய்கிறார்? என்று சண்டை போட்டார். மேலும், நீ என்கூடதான் இருக்கிறாய் என்பதை பசுபதியிடம் தைரியமாகச் சொல், நாங்கள் இருவரும் சேர்ந்து வாழப்போகிறோம்' என்று கூறும்படி தெரிவித்தார்.

உடனே நான், `தேவையில்லாத பிரச்னை ஏற்படும் என்று கூறினேன். மேலும், விவாகரத்து வாங்க வேண்டும் என்றேன். ஆனால், கணேஷ்குமார் அதைக் கேட்காமல் பசுபதிக்கு போன் செய்து, நான் இங்குதான் இருக்கிறேன். உன்னால் முடிந்ததைச் செய் என்று தெரிவித்தார். அதன்பிறகுதான் பசுபதி மற்றும் அவரின் கூட்டாளிகள் வந்து கணேஷ்குமாரை கொலை செய்துவிட்டனர். என்னையும் கொலை செய்ய முயன்றனர். ஆனால், நான் தப்பி ஓடிவிட்டேன்’ என்று கூறியுள்ளார்.