மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு நேற்று விடுத்த அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து, வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்குடன், சில நடவடிக்கைகளை மத்திய வங்கி நேற்றைய தினமே அறிமுகப்படுத்தியுள்ளது.


கொவிட் 19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரத்துறைக்கு 15,000 கோடி ரூபாய்கள் மீள் நிதியீட்டு வசதிகளை வழங்குவது அதில் ஒன்றாகும்.

இந்த நிதியானது அங்கீகாரம் பெற்ற வர்த்தக வங்கிகளின் ஊடாக வியாபாரத்துறைக்குப் பகிர்ந்தளிக்கப்படும்.
அதற்காக அறவிடப்படும் வட்டி 4% வீதமாகும்.
கடன் வழங்கலுக்காக வர்த்தக வங்கிகளுக்குத் தேவையான நிதி 1% வீத சலுகை வட்டி வீதத்திற்கு மத்திய வங்கியினால் வழங்கப்படும்.
கடநத காலப் பகுதியில் பல்வேறு வியாபாரத் துறைகளினால் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட உற்பத்திகள் மற்றும் சேவைகளுக்காக பாரிய நிதியை அரசாங்கம் அவர்களுக்குச் செலுத்த வேண்டியுள்ளது.
அவற்றைப் பிணையாக வைத்துக்கொண்டு வீழ்ச்சியடைந்துள்ள வியாபாரத்துறைகளுக்கு நிதி வசதிகளை வழங்குமாறு நான் நேற்றைய கூட்டத்தின்போது மத்திய வங்கிக்கு பணிப்புரை விடுத்தேன்.
அந்த வகையில் வர்த்தக வங்கிகளுக்கு பொறுப்புறுதியின் அடிப்படையில் சலுகை வட்டியின் கீழ் நிதியளிப்பதற்கு நேற்று இடம்பெற்ற நிதிச்சபைக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டது.
இது தவிர நிர்மாணத்துறைக்குத் தனியான கடன் முன்மொழிவு முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நிர்மாணத்துறை நிறுவனங்களுக்குக் கிடைக்க வேண்டிய நிதிக்குச் சமனாக அரசாங்கம் வெளியிடும் உத்தரவாதத்தின் அடிப்படையில் சலுகை வட்டிக்கு கடன் வழங்குவது அதன் நோக்கமாகும்.
பொருளாதாரப் புத்தெழுச்சிக்காக மத்திய வங்கி நேற்று மேற்கொண்டுள்ள தீர்மானங்களின்படி வர்த்தக வங்கிகளின் ரூபா வைப்புக்காக சட்ட ரீதியான ஒதுக்கீட்டு விகிதம் ஜூன் 16ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 2% வீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
அதன் பெறுபேறாக 11,500 கோடி ரூபா மேலதிக திரவத்தன்மை உடனடியாக கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடிய வகையிலான நிதி அளவு நிதிச் சந்தைக்கு விடுவிக்கப்படும்.
ஒதுக்கீட்டு விகிதத்தைக் குறைப்பது வர்த்தக வங்கிகளின் கடன் வழங்கல் செலவை குறைப்பதற்கு அடிப்படையாக அமையுமென்பதால் பொருளாதாரத்தின் கடன் பாய்ச்சல் விரிவடையும்.
கடன் செலவு குறைவடைவதன் நன்மைகள் வியாபாரத்துறைக்கும் குடும்பங்களுக்கும் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
நிதி நிறுவனங்கள் வீழ்ச்சியடைதல் மற்றும் குத்தகைக் கடன் வழங்கும் நிறுவனங்களின் முறைகேடான நடவடிக்கைகளுக்கு மத்தியில் செயலற்று இருப்பது குறித்து நான் நேற்றைய கூட்டத்தின் போது மத்திய வங்கி அதிகாரிகளை எச்சிரித்திருந்தேன்.
அதற்குப் பதிலாக மத்திய வங்கி ஆளுநரினால் நிதி மற்றும் குத்தகைக் கடன் வழங்கும் நிறுவனங்களின் முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்டறிவதற்காக மூன்றுபேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
எனது சட்டத்துறை பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹணதீர இக்குழுவின் தலைவராக செயற்படுவதுடன், இலங்கை மத்திய வங்கியின் சட்டத்துறை பணிப்பாளர் கே. ஜி .பி. சிறிகுமார மற்றும் மத்திய வங்கியின் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை முகாமைத்துவம் செய்யும் பிரிவின் பணிப்பாளர் ஜே. பி. கம்லத் ஆகியோர் ஏனைய இரு உறுப்பினர்கள் ஆவர்.
பொதுவாக அனைத்து நிதி நிறுவனங்களினதும் குறிப்பாக மத்திய வங்கியில் பதிவு செய்யப்படாத லீசிங் நிறுவனங்களினதும் செயற்பாடுகள் குறித்து குழு விசாரணை செய்ய உள்ளது.
இந்த குழுவின் அறிக்கை 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
கொவிட் நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டிருந்த சட்டங்கள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து உற்பத்திப் பொருளாதாரம் வழமை நிலைமைக்கு திரும்பி வருவதாக மத்திய வங்கி குறிப்பிடுகின்றது.
உணவு மற்றும் குடிபான வகைகள், துணிகள் மற்றும் ஆடை உற்பத்தித் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் 3.5 ஆக இருந்த உற்பத்தி உப சுட்டி மே மாதத்தில் 51.1 வரை அதிகரித்துள்ளது.