டெல்லியில் தொழிலதிபர் ஒருவர் காப்பீட்டு தொகை கிடைக்க வேண்டும் என தன்னைத் தானே ஆள் வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியை சேர்ந்த 37 வயதான கவுரவ் பன்சல் என்பவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். கவுரவ் பன்சல் மற்றும் அவரது மனைவி ஷானு மற்றும் குழந்தைகள் ஆர்யா நகர் பகுதியில் வசித்து வந்தனர்.

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடன் தொல்லையில் ஆளான கவுரவ் பன்சல் தன் குடும்பமாவது, கடன் தொல்லை இல்லாமல் வாழ தன் பெயரில் உள்ள காப்பீடு தொகை கிடைப்பதற்காக ஒரு விபரீத யோசனையை செயல்படுத்தியுள்ளார்.

ரூ.60,000யை கூலிப்படைக்கு கொடுத்து தன்னையே ஆளை வைத்துக் கொலை செய்யச் சொல்லி கொலையாகியுள்ளார். கவுரவ் பன்சல் கடந்த 9 ம் தேதி திடீரென காணாமல் போகியுள்ளார். அதற்கு அடுத்த நாளே கைகள் கட்டப்பட்ட நிலையில் மர்மமான முறையில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சுராஜ், மனோஜ்குமார் யாதவ், சுமித் குமார் ஆகியோரைக் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலம் மூலமே கவுரவ் பன்சல் அவரையே கொல்ல திட்டம் தீட்டியது அம்பலம் ஆனது.

கவுரவ் பன்சால் தனக்கு சேர வேண்டிய காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சம், தான் இறந்த பிறகு தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என இவ்வாறு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கடன் தொல்லை இன்றி தன் குடும்பம் அமைதியாக வாழ தன் உயிரையே விலை பேசி கொலையுண்ட சம்பவம் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.