லடாக்கில் உள்ள பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த மாதம் 15-ஆம் தேதி ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களுக்கும் - இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 பேர் உயிரிழந்தனர்.  இதனை அடுத்து இருநாட்டு ராணுவ அதிகாரிகளுக்குமிடையில் உண்டான பேச்சுவார்த்தையின்படி, லடாக் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற ஒப்புக்கொள்ளப்பட்டது.


ஆனால் கல்வான் பகுதியில் சீனா தனது படைகளை குவித்துள்ள காட்சிகள் செயற்கைக் கோள் படத்தில் பதிவானதை அடுத்து, தனது சக்தி வாய்ந்த டி-90 பீஷ்மா பீரங்கிகளை அதிகளவுக்கு எல்லைக்கு நகர்த்தியுள்ளதாகவும், துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட இந்த பீஷ்மா பீரங்கிகள் ஒரு நிமிடத்தில் 60 குண்டுகளை பொழியக் கூடிய ஆற்றல் மிக்கதாகவும் கூறப்படுகிறது.
ரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களை கையாளும் திறன் கொண்ட இந்த பீஷ்மா பீரங்கிகள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை என்பது 48 டன் எடைகொண்ட இந்த பீரங்கி ஆயிரம் குதிரை விசை ஆற்றல் கொண்டது என்பதும், 6 கிமீ தூரம் வரை எதிரியின் இலக்கை துல்லியமாக தாக்கக் கூடியது  என்பதும் குறிப்பிடத்தக்கது.
சீனாவிடமும் இந்த பீரங்கிக்கு நிகராக டி95 பீரங்கிகள் உள்ளதாகவும், இந்தியாவிடம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டி90 பீரங்கிகள் உள்ளதாகவும், ஆனால் சீனாவிடம் 3,500 பீரங்கிகள் மட்டுமே உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.