வேலூர் மாவட்டத்தில் பெண்ணின் சித்தப்பாவை பழிவாங்க 15 வயது சிறுமியின் குளிக்கும் வீடியோவை 3 இளைஞர்கள் வாட்ஸப்பில் அனுப்பியதால் மனமுடைந்த சிறுமி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் பாகாயத்தை அடுத்துள்ள துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் திடீரென வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் எடுத்து உடலில் ஊற்றி கொளுத்திக்கொண்டு, தெருவிற்கு வந்துள்ளார்.


இதனை பார்த்த அங்கிருந்த தெரு மக்கள் சிறுமியின் உடலில் இருந்த தீயை அணைத்து உடனடியாக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிறுமியின் உடலில் 95 சதவீதம் தீ காயம் ஏற்பட்டுள்ளதால் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் அறிந்து மருத்துவமனைக்கு வந்த போலீசார் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்ற போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.
வீடியோவாக பதியப்பட்ட வாக்குமூலத்தில் சிறுமி, தான் தீ குளித்து தற்கொலை செய்து கொள்ள காரணம் அதே கிராமத்தை சேர்ந்த மூன்று பேர் என தெரிவித்துள்ளார். தன் வீட்டின் பின்புறம் உள்ள திறந்தவெளிக் குளியலறையில் குளித்துக்கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்ததாகவும், அதனை சிறுமியின் சித்தப்பா செல்போனுக்கு அனுப்பியதாக கூறினார்.

மேலும் அந்த வாக்குமூல வீடியோவில் 'எங்கிட்ட அவனுங்க, `உன்னையும் உன் சித்தப்பனையும் பழிவாங்குறதுக்காக உனக்கே தெரியாம ஒரு வீடியோ எடுத்து இந்த நம்பர் வாட்ஸப்ல அனுப்பிருக்கோம். அத பாத்துட்டு நீ திரும்ப எங்க லைன்க்கு வா. இல்லனா இதை நெட்ல போட்ருவோம்னு சொன்னாங்க. வாட்ஸப்ல நான் குளிக்குற வீடியோ இருந்துச்சு. நான் ஒடனே அவனுங்களுக்கு போன் பண்ணி டெலீட் பண்ண சொன்னேன். ஆன அவனுங்க 5000 கேட்டானுங்க. எனக்கு என்ன பண்றதுனு தெரில, என் சித்தி கிட்ட சொன்னேன். அவங்க பணம்லாம் தர வேண்டாம் நாம போலீஸ்கிட்ட போவோம்னு சித்தி சொன்னாங்க. அவனுங்க திரும்பி போன் பண்ணானுங்க. அப்போ வேலூர் கோட்டைக்கு வர சொன்னாங்க. நான் முடியாதுனு சொன்னதுக்கு, சரி, பக்கத்துல இருக்கிற ஏரிக்கரை மலைக்காவது வாடினு சொன்னாங்க.  அங்க அந்த மூணு பேரும் இருந்தாங்க, நான் உடனே கைல போன் வெச்சிட்டு இருந்த ஒருத்தன் சட்டையை புடிச்சிட்டு விடாம கத்தினேன். அப்ப ரெண்டு பேர் ஓடிட்டானுங்க. பிடிபட்டவன் கிட்ட இருந்த செல்போனை பிடுங்கி அதிலிருந்த நான் குளிக்கிற வீடியோவை டெலிட் பண்ணேன். என் வீடியோ மட்டும் இல்லாம நிறைய பேர் குளிக்குற வீடியோ இருந்துச்சு. என் பாட்டி குளிக்குறது கூட இருந்துச்சு. எல்லா வீடியோவையும் நான் டெலிட் பண்ணிட்டு இருந்தப்போ, என் தலையில் கல்லால் தாக்கிட்டு அவனும் ஓடிட்டான். அப்புறம் தான் நான் வீட்டுக்கு ஓடியாந்து என்ன பண்றது தெரியாம கொளுத்திக்கிட்டேன்' என அந்த சிறுமி வீடியோவில் கூறியுள்ளார்.


மாணவியின் வாக்குமூலத்தை அடுத்து போலீசார், ஆபாச வீடியோ எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த பூனைக்கண்ணன் என்கிற ஆகாஷ், பாலாஜி, கணபதி என்கிற தாமஸ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் வேலூர் மாவட்ட மக்களை மட்டும் இல்லாமல் தமிழ்நாடு முழுக்க மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.