கர்ப்பமான 17 வயது மகளை பெற்றோரே பேரம் பேசி காதலனிடம் விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் ஷினோர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி விகாஷ் வாசவா என்பவருடன் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த விஷயம் தெரிந்ததும் சிறுமியின் பெற்றோர் அவரை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர். இதனை அடுத்து விகாஷ் ஷினோரிடம் சிறுமியின் பெற்றோர் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளனர். அதன்படி 50,000 ரூபாய்க்கு சிறுமியை விலை பேசியுள்ளனர். சிறுமியும் தனது காதலனுடன் செல்ல இருப்பதால் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தெரிந்த சிறுமியின் உறவினர்கள், சிறுமியின் பெற்றோரிடம் 50,000 ரூபாய் மிகவும் குறைவான பணம் என்றும் அதனால் விகாஷிடம் 5 லட்சம் கேட்கும்படியும் ஆலோசனை கூறியுள்ளனர். இதனால் சிறுமியின் பெற்றோரும் விகாஷிடம் 5 லட்சம் கொடுக்க வேண்டும் என பேரம் பேசி, தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர்.
ஆனால் சாதாரண தொழிலாளியான விகாஷிக்கு அந்த பணம் பெரிய தொகை என்பதால் கொடுக்க முடியாது என தெரிவித்துள்ளார். மேலும் சிறுமியை அவரது வீட்டுக்கு செல்லும்படி விகாஷ் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் சிறுமியின் பெற்றோர் மற்றும் விகாஷை கைது செய்தனர். மேலும் சிறுமியை காப்பகத்தில் அனுமதித்தனர். கர்ப்பமான மகளை காதலனிடம் விற்க பெற்றோர் பேரம் பேசிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.