இந்தியா சீனா இடையிலான எல்லைப் பிரச்சனை அதி தீவிரமாக நிலவி வரும் நிலையில்,  கடந்த ஜூன் 15ஆம் தேதியன்று கல்வான் பள்ளத்தாக்கில் இரு ராணுவத்தினரும் மோதிக்கொண்டதில் தமிழக வீரர் உட்பட 20 இந்திய வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.


இதனிடையே சீன தரப்பிலும் 40 வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானதை அடுத்து சீன வெளியுறவுத்துறை அமைச்சர், இதற்கு விளக்கம் தராமல் இருந்தார். இந்த நிலையில், இதுகுறித்து பேசிய சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஷோ லிஜியான், “சீன தரப்பில் 40 வீரர்கள் உயிரிழந்ததாக வெளியாகிய செய்திகள், போலியான செய்திகள்.  இதனை உறுதியாக சொல்ல முடியும். இதுபற்றி ஜூன் 22ஆம் தேதியன்று இருதரப்பு ராணுவ தளபதிகலும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.” என்று கூறினார்.
மேலும், “இந்த சந்திப்பின் மூலம் இருநாட்டு எல்லை பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டு, எல்லையில் அமைதியை நிலைநாட்ட இணைந்து பணியாற்றுவதற்கு இருதரப்புகளும் ஒப்புக்கொண்டுள்ளன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த சீன விரர்களின் எண்ணிக்கையை சீனா வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ள மத்திய அமைச்சரும் ஓய்வுபெற்ற ராணுவ ஜெனரலுமான வி.கே.சிங் ,   “இந்தியாவுக்கு ஏற்பட்ட உயிர்சேதத்தை விட சீனாவுக்கு கண்டிப்பாக இருமடங்கு உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும்” என்றும் இதேபோல் 1962ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய-சீன போரிலும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை சீனா ஒப்புக்கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.