நொய்டாவில் உறங்கிக் கொண்டிருக்கும் போது அழுதுக் கொண்டிருந்ததால் 3 மாத குழந்தையை ஜன்னலின் வழியே தூக்கி எறிந்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.


உலகெங்கிலும் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகள் ஊரடங்கு முறையை பின்பற்றி வருகின்றது. மேலும் ஊழியர்கள் தங்களின் வேலைகளை இழக்கும் நிகழ்வும் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் நொய்டாவில் வேலை இழந்து தவித்த நபர் மன அழுத்தத்தில் அழுதுக்கொண்டிருந்த தன் குழந்தையை ஜன்னனில் இருந்து தூக்கி வெளியே எறிந்துள்ளார்.நொய்டாவில் குடிபெயர்ந்து வாழும் நைஜீரியாவை சேர்ந்த 30 வயதான ஓசியோமா டெக்லன் என்பவர் சலூன் மற்றும் பியூட்டி பார்லர்களில் இருந்து முடியை சேகரித்து விக் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வழங்கும் வேலை செய்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் வீட்டில் இருக்கும் இவர் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் ஓசியோமா வீட்டில் தூங்கி கொண்டிருக்கும் போது அவரது 3 மாத பெண் குழந்தை அழுது கொண்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த ஓசியோமா அழுத குழந்தையை எடுத்து தரையில் வீசி எறிந்துள்ளார். அதனை பார்த்த அவரது மனைவி வந்து தடுப்பதற்குள், மீண்டும் குழந்தையை எடுத்து இரண்டாவது தளத்தில் உள்ள ஜன்னல் வழியாக வெளியே வீசியுள்ளார்.
ஓசியோமாவின் மனைவி சாலையில் விழுந்த குழந்தையை எடுத்து கொண்டு மருத்துவமனைக்கு ஓடியுள்ளார். ஆனால் குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் தாய் அளித்த புகாரின் பெயரில் குழந்தையின் தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கடந்த 3 மாதங்களாகவே தன் கணவர் கடும் மனஅழுத்ததில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.