நமது கேலக்ஸியில் நம்மைப் போன்ற அறிவார்ந்த உயிர்கள் எனக் கருதப்படும் ஏலியன்கள் 30க்கும் மேற்பட்ட கிரகங்களில் இருக்கலாம் என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.


மனித சிந்தனை வரலாற்றில் மிகப் பெரிய மற்றும் நீண்டகால கேள்விகளில் ஒன்று, நமது பிரபஞ்சத்திற்குள் மற்ற புத்திசாலித்தனமான வாழ்க்கை வடிவங்கள் உள்ளனவா? என்பதுதான்.

இந்தகேள்விக்கு விடைகாணும் விதமாக, The Astrophysical Journal என்ற வானியல் இதழில், நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில், அண்ட பரிமாணக் கொள்கையின் அடிப்படையில் இந்த உலகில் 36 ஏலியன் சமுதாயங்கள் இருப்பதாக கூறியுள்ளனர்.

விண்மீன், நட்சத்திரங்கள் உருவாகுதல், அவற்றின் கனிம உலோக அமைப்பு ஆகியவற்றை வைத்து ஆய்வு செய்ததில், நமது பால் வீதி மண்டலத்தில் பூமியைப் போன்ற உயிருள்ள கோள்கள் இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் பேராசிரியர் கிறிஸ்டோபர் கான்செலிஸ் கூறியபோது, நமது கேலக்ஸியில் பூமியில் இருப்பது போல குறைந்தது சில டஜன் நாகரிகங்களாவது இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நாகரிகங்களுக்கான சராசரி தூரம் 17,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது நமது தற்போதைய தொழில்நுட்பத்துடன் ஒப்பிடுகையில் கண்டறிந்து தகவல்தொடர்பை மேற்கொள்வது என்பது மிகவும் கடினமாகும்.

அவர்கள் எந்த கிரகங்களில் வாழ்கிறார்கள். அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியுமா? என்பது குறித்து எதிர்காலத்தில் விடை கிடைக்கலாம்