லடாக்கில் சீன ராணுவத்தினருடனான மோதலில், இந்திய ராணுவ அதிகாரி உட்பட 3 பேர் பலியான சம்பவத்தால், எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் நேற்றிரவு இருநாட்டு படைகளையும் திரும்பப் பெறும் நடவடிக்கையின்போது, திடீர் மோதல் வெடித்தது. இந்த மோதலில், இந்திய தரப்பில் ராணுவ அதிகாரி ஒருவர் உட்பட 3 ராணுவத்தினர் வீரமரணமடைந்தனர்.
சம்பவ பகுதியில் பதற்றம் நிலவுவதால், இருநாட்டு ராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக விளக்கமளித்துள்ள இந்திய ராணுவத்தினர், இருநாட்டு ராணுவ வீரர்களுடனான மோதலின்போது, துப்பாக்கிச்சூடு எதுவும் நடைபெறவில்லை என்றும், கல்எறிதல் மற்றும் கைகலப்பு மட்டுமே நடந்ததாக தெரிவித்துள்ளனர்.
லடாக் சம்பவம் தொடர்பாக சற்றுநேரத்தில் இந்திய ராணுவத்தினர் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளனர். 1975 ஆம் ஆண்டிற்கு பிறகு முதன்முறையாக இந்தியா- சீனா ராணுவ வீரர்கள் இடையேயான மோதலில் உயிர்பலி ஏற்பட்டது நினைவுக்கூரத்தக்கது.