புலிகள் காப்பக வனப்பகுதியில் தாய் புலி மற்றும் அதன் 2 குட்டிகளுக்கு விஷம் வைத்து கொன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.


மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள தடோபா அந்தாரி புலிகள் காப்பக வனப்பகுதியில், கடந்த 10ம் தேதி தாய் புலியும் அதன் 2 குட்டிகளும் இறந்து கிடந்துள்ளன. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் புலியை பரிசோதனை செய்தனர். அதில் தாய் புலியின் உடல் பாகங்கள் காயம் ஏதுமின்றி இருப்பது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து மேற்கொண்ட பரிசோதனையில் புலியின் உடலில் விஷம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் புலியின் இறப்புக்கு காரணமான குற்றவாளிகளை வனத்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் கோண்டேகான் கிராமத்தில் வசிக்கும் சூர்யபன் தாகரே, ஷ்ரவன் மாதவி மற்றும் நரேந்திர தத்மல் ஆகிய மூவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், மூவரும் கோண்டேகான் கிராமத்தில் விலங்குகள் தண்ணீர் குடிக்க அமைக்கப்பட்டுள்ள குளத்தில் விஷத்தை கலந்தது தெரியவந்துள்ளது. மேலும் இந்த மூவரும் கோண்டகான் குளம் அருகே மஹு பூக்களிலிருந்து சட்ட விரோதமாக மதுபானம் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். விஷம் கலந்த தண்ணீரை குடித்ததில் தாய் புலி அதன் குட்டிகளுடன் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.