திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதி இருதயபுரம் பகுதியில் அம்புலன்ஸ் வண்டி - மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இவ்விபத்து நேற்று(24) மாலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் தோப்பூர் - அல்லைநகர் பகுதியைச் சேர்ந்த ஜவாஹிர் முகம்மட் அஹ்ஸான் ( 25 வயது) எனவும் தெரியவருகின்றது.
கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலை அம்புலன்ஸ் வண்டி நோயாளர்களை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று மீண்டும் வைத்தியசாலைக்கு செல்கின்றபோது தோப்பூர் பிரதேசத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வருகை தந்து கொண்டிருந்த இளைஞர் அம்பியூலன்ஸ் வண்டியுடன் மோதி படுகாயமடைந்த நிலையில் மூதூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது மூதூர் தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்துடன் தொடர்புடைய அம்பியூலன்ஸ் சாரதியை கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.