பாதாள உலக குழுக்களின் செயற்பாடுகளை ஒழிக்கவும், அக்குழுக்கள் ஊடாக அறியப்படும் குற்றச் செயல்களாக அடையாளம் காணப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் பொலிஸ் தலைமையகம் சிறப்பு திட்டங்களை வகுத்துள்ளது.


இதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 8 முக்கிய புள்ளிகளிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைதானவர்களில் 6 பேர் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினராலும், 2 பேர் திட்டமிடப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் விசாரணைப் பிரிவினராலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிரடிப் படையினர் கைது செய்த 6 பேரில், இருவர் மத்துகமவில் வாள், கத்தி, குற்றம் ஒன்றினை முன்னெடுக்க தயார் நிலையில் கைவசம் வைத்திருந்த போலி கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 29, 26 வயதுகளை உடையவர்களாவர்.
ஹங்வெல்லையில் வைத்து மூவரைக் கைதுசெய்துள்ள அதிரடிப் படை, அவர்களிடம் இருந்து கஞ்சா, வாள் போன்றவற்றை மீட்டுள்ளது. கைதானோர் 22,32,40 வயதுகளை உடையவர்களாவர்.
இதனைவிட இரத்மலானையில் வைத்து 38 வயதுடைய ஒருவரை அதிரடிப் படை கைது செய்துள்ளது.
இதேவேளை திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவினர் ரம்புக்கன பகுதியில் வைத்து ஒரு கிலோ 500 கிராம் ஹெரோயினுடன் 29 வயதுடைய இளைஞர் ஒருவரையும் 50 வயது பெண் ஒருவரையும் கைது செய்துள்ளனர். கைதான பெண் பலப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் இளைஞன் ரம்புக்கனையைச் சேர்ந்தவர் எனவும் கூறப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டோரில் பெரும்பாலானோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் சிலரிடம் பொலிசார் தொடர் விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
பாதாள உலகக் குற்றங்களை கட்டுப்படுத்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் கீழ் நிறுவப்பட்டுள்ள சிறப்பு விசாரணைக் குழுக்களுக்கு உதவி செய்ய, பொலிஸ் விஷேட அதிரடிப் படை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவு ஆகியனவும் இணைந்து செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.