லடாக் மோதலில் இந்திய வீரர்கள் மொத்தம் 20 பேர் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.


இந்தியா-சீன எல்லையில் பதற்றத்தை தணிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று இரவு இரு தரப்பு படைகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

இதில் இந்திய ராணுவம் தரப்பில் ஒரு அதிகாரி 2 வீரர்கள் என 3 பேர் உயிரிழந்துள்ளனர் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இந்த மோதலில் படுகாயமடைந்த மேலும் 17 வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் இதனால் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாகவும் இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் இந்த மோதலில் சீன தரப்பில் 43 பேர் உயிரிழந்துள்ளதாக ஏ.என்.ஐ. நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.  

நேற்று நடந்த இந்த மோதலில் துப்பாக்கிச்சூடு எதும் நடைபெறவில்லை எனவும், இரு தரப்பு வீரர்களும் கற்கள், இரும்பு கம்பிகள் போன்ற பயங்கர ஆயுதங்களை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்தியா - சீனா இடையே, எல்லை பதற்றத்தை தணிக்கும் விதமாக, இருதரப்பிலும் படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டிருப்பதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, இருநாட்டு ராணுவமும் லடாக் எல்லையில், கால்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட 3 இடங்களில் இருந்து இந்திய, சீன படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.

அதே சமயம், பாங்காக் ஏரி, தவுலத் பெக் ஓல்டி உள்ளிட்ட இடங்களில் படைகள் வாபஸ் பெறப்படவில்லை. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் இருதரப்பிலிருந்தும் வரவில்லை.