பத்து வருடம் கழித்து யமுனை நதிக்கு வந்த அரியவகை உயிரினம் வந்துள்ளது.  கொரோனா ஊரடங்கால் உலகளவில் சுற்றுச்சூழலில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. தொழிற்சாலைகள் இயக்கம், வாகன ஓட்டம் முற்றிலும் குறைந்ததால் காற்றுமாசு வெகுவாக குறைந்துள்ளது. அதேபோல் நதிகளில் நீரும் சுத்தமாகியுள்ளது. இந்தியாவின் மிக பெரிய நீர் வழிப்பாதையாக கருதப்படும் யமுனை நதி, அதிகளவில் மாசடைந்து காணப்பட்டது.


இந்த நதியில் டால்பின்கள் மற்றும் மீன்களை மட்டுமே உண்டு வாழும் கரியல் (Gharial) என்ற அரியவகை முதலைகள் வசித்து வந்தன. அதிகமான நீர் மாசுபாடு காரணமாக டால்பின்கள் பல இறந்து போயின. இதனால் கரியல் வகை முதலைகள் கடந்த 10 ஆண்டுகளாக யமுனை நதியில் தென்படவே இல்லை.

இந்த நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், யமுனை நதி சுத்தமடைந்துள்ளது. தண்ணீரும் பளிங்கு போல ஓடத் தொடங்கியுள்ளது. இதனால் கரியல் வகை முதலைகள் மீண்டும் யமுனை நதியில் தென்படத் தொடங்கியுள்ளன. நான்கு, ஐந்து முதலைக்குட்டிகள் தண்ணீரின் மேற்பரப்பில் சுற்றித்திரிந்ததை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர்.
யமுனை நதியின் துணை நதியான சம்பல் நதியில் இந்த முதலைக்குட்டிகள் பிறந்துள்ளன. இதுகுறித்து தெரிவித்த சம்பல் வனச்சரக அதிகாரிகள், ‘யமுனை நதியுடன் சம்பல் நதி கலக்குமிடத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் இந்த முதலைக்குட்டிகள் பிறந்துள்ளன. தற்போது இவை நல்ல வளர்ச்சி அடைந்து நீரில் விளையாடுகின்றன. இது ஒரு திருப்தி தரும் மாற்றம்’ என தெரிவித்துள்ளார்.