பொதுவாக நபர் ஒருவர் மதுபானங்கள் அதிகம் அருந்தும் போது, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி இருக்கும். அதே நேரம் அதிக மதுபானத்தை அருந்தி விட்டு சிறுநீரைக் கட்டுப்படுத்தும் வேளையில் அது அவர்களின் சிறுநீர்ப்பைக்கு ஏதேனும் சிக்கல்களை உருவாக்கும்.


இந்நிலையில் சீனாவை சேர்ந்த ஹு என்னும் நபர், 18 மணி நேரம் சிறுநீரை கட்டுப்படுத்தியதன் காரணமாக அவரது சிறுநீர்ப்பை சிதைந்து போய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தூக்கத்தில் இருந்து அந்த நபர் எழுந்த போது அவரின் வயிற்றுப் பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

முன்னதாக 40 வயதான அந்த நபர் 10 க்கும் மேற்பட்ட பீர் பாட்டிலை நாள் முழுவதும் குடித்துக் கொண்டு கிட்டத்தட்ட 18 மணி நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்து பின் தூங்கச் சென்றுள்ளார். இதனையடுத்து, அவரது சிறுநீர்ப்பை பகுதியை ஸ்கேன் செய்து பார்த்த போது அதில் காயம் ஏற்பட்டு சிதைந்து போயுள்ளது தெரிய வந்தது.

உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மூன்று மருத்துவர்கள் மேற்கொண்ட அறுவை சிகிச்சை முடிவில் அவர் உடலில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சிறுநீர்ப்பையில் சிதைப்பட்டு இருந்த பகுதிகளை மருத்துவர்கள் சரி செய்தனர். தற்போதுள்ள தகவலின் படி, அந்த நபர் நல்ல நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.