அமெரிக்காவின் பிரசித்திப்பெற்ற இரட்டைக் கோபுரம், பென்டகன் போன்ற கட்டிடங்களை கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி விமானத்தை மோதவிட்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 

இதன் பிறகு கடுங்கோபத்திற்கு ஆளாகிய அமெரிக்கா, தன் ராணுவ படைகளை கொண்டு பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டது. இந்த தாக்குதலுக்கு காரணமான அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் உள்பட முக்கிய பயங்கரவாத தலைவர்கள் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவமும் அமெரிக்கா ஆப்கானுக்கு நுழைய காரணமாகவும் இருந்தது.

மேலும், அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கடந்த வருடம் உடல்நலம் குன்றி உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், உலகம் முழுதும் அவர் இறந்து விட்டதாகவே கருத்தப்பட்டது. அதன்பின் அவர் வீடியோவில் தோன்றவில்லை.

இந்நிலையில், இரட்டைக் கோபுரம் இடிக்கப்பட்ட நாளான செப்டம்பர் 11-ஆம் தேதி அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஜெருசலேம் ஒருபோதும் யூதமயமாக்கப்படாது. சிரியாவில் ரஷிய ராணுவம் மீது அல்-கொய்தா ராணுவம் நடத்திய தாக்குதலை பாராட்டியுள்ளார். ஆனால், தாலிபான் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது குறித்து அல்-ஜவாஹிரி ஏதும் கூறவில்லை. வெளிவந்த இந்த வீடியோ உலகளவில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.ஐ.டி.இ. உளவுக்குழுவும் வெளிவந்த இந்த வீடியோவை ஆராய்ந்து நேற்று முன்தினம் (11-09-2021) வெளியிடப்பட்டதை உறுதி செய்துள்ளது.