யாழ்ப்பாணம் – இணுவிலைச் சேர்ந்த அஜந்தன் இனியா (வயது-25) என்ற இளம் பெண் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த நிலையில் கொரோனாவால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

குழந்தைகள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். கடந்த 4 ஆம் திகதி கர்ப்பிணிப் பெண்ணுக்கு மூச்செடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் அன்றைய தினம் தெல்லிப்பழை வைத்தியசாயைில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அன்றைய தினமே அவருக்கு கொரோனா நோய்த் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேற்று முன்தினம் ஆண் குழந்தை ஒன்றும் பெண் குழந்தை ஒன்றுமாக இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.  அதன் பின்னர் தாயாருக்கான சிகிச்சைகள் தொடர்ந்த நிலையில் நேற்று சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்தார். சடலம் சுகாதார முறைப்படி தகனம் செய்ய அனுமதிக்கப்பட்டது.